
பதினான்கு வருடங்களுக்கு முன் “வெங்காயம் (2011)” எனும் படத்தை இயக்கியிருந்தார் சங்ககிரி ராச்குமார். இயக்குநர் சேரனின் முயற்சியால், அப்படம் மீண்டும் 2012 இல் மறுபடியும் வெளியானது.
வெங்காயம் படத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எப்படி எடுத்தார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் ராச்குமார் சங்ககிரி.
ஜோதிடத்தையும், நரபலி சடங்கையும் மிகக் காத்திரமாக சாடிய படம் வெங்காயம். அப்படத்தில் தன்னைத்தான் வில்லனாகச் சித்தரிக்கிறார்கள் என அறியும் செல்வாக்கான ஜோதிடர், ராச்குமாரின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்வதோடு, படம் வெளியாகக் கூடாதென்பதற்காகவும் காய்களை நகர்த்துகிறார். அப்படியே ஒரு படம் எடுக்கப்பட்டாலும், அப்படத்தை வெளியிட எத்தகைய சங்கடங்கள் எழும் என்பதையும், சினிமாவிற்குள் இருப்பவர்கள் வியாபாரத்தில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் சொல்லியுள்ளார் சங்ககிரி ராச்குமார்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அவரது உறவினர்களாவர். குறிப்பாக, அவரது பாட்டிகளும் தாத்தாகளும் பிரதான பாத்திரங்களில் நடித்து, மிக எதார்த்தமான நடிப்பால் கலகலக்க வைக்கின்றனர். படத்தில் நடித்து முதலைமைச்சர் ஆகிவிட வேண்டுமென அலப்பறை செய்கிறார் வெள்ளையம்மாள் பாட்டி. அவரிடம் நடிக்க வாய்ப்புக் கேட்கும் கிராமத்துப் பெண்மணி, உண்ணுவதற்கு இட்லியைக் கொடுத்து, “அக்கா” என விளிக்கிறார். இப்படிப் போகிற போக்கில் அரசியல் நையாண்டி செய்தும் அசத்தியுள்ளார்.
பதிலுக்குப் பதில் பேசி சண்டை இழுக்கும் காட்சியை விளக்கிவிட்டு ஒத்திகைக்குப் போகின்றனர். அப்பெண்மணி மிக அற்புதமாக நடித்து, ‘கட்’ சொல்லிய பின்னும் சண்டையிட்டு இயக்குநரைத் தெறிக்க விடுகிறார். கிரேன் உபயோகித்து முருங்கைக்காய் பறிக்கும் பாட்டி என ராச்குமாரின் படப்பிட்டிப்பு, நான்-ஸ்டாப் அலப்பறையாகச் செல்கிறது. பட்ஜெட் போதாமைகளை மீறிப் படத்தை ரசிக்க முடிவதற்கு ராச்குமாரின் எழுத்து உதவுயுள்ளது. Aha Find என்ற புதிய முன்னெடுப்பின் முதல் பயனாளியாக ராச்குமார் சங்ககிரியைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி.
மையக்கதையின் ஊடாக ஒரு காதல் ஜோடியின் கிளைக் கதையும் படத்தில் வருகிறது. ராச்குமாரின் வெங்காயம் படம் எப்படி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுகிறது என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயன்றுள்ளனர். தனது படைப்பு ஒருவரது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது என அறிந்து, மனது நிறைந்து ராச்குமார் உடைந்து அழுகிறார். படைப்பாளனுக்கு இத்தகைய நெகிழ்வான தருணங்களே தொடர்ந்து இயங்குவதற்கான ஊக்கத்தை அளிக்கின்றன. பயோஸ்கோப், சின்ன பட்ஜெட் படங்களின் வலியை அழுத்தமாகப் பதிந்துள்ளது.