வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங்கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே! அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திருவிழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக அவர்கள் இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்குப் பக்கத்துணையாக டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
24AM ஸ்டூடியோஸ் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
“ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எனக்கு கொஞ்சம் பயம் இருந்துட்டே இருக்கும். ஆனால் இந்த படம் ரிலீஸுக்கு எனக்கு சுத்தமா பயமே இல்லை. படத்தின் வெற்றி முன்பே எழுதப்பட்டு விட்டது. கிராமத்து படம் என்றாலே அது பொன்ராம் சார், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரின் கோட்டை. அதில் எனக்கும் ஒரு நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய மொத்த குழுவுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் நாயகி சமந்தா அக்கினேனி.
“சிவா இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். குழந்தைகளை கவர சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். படம் உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலே இருக்கும்” என்றார் நடன இயக்குநர் ஷோபி.
“பொன்ராம் உடன் இது எனக்கு மூன்றாவது படம். படத்தை ஆரம்பிக்கும்போதே இது வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. இப்போதைய எஸ்.பி. முத்துராமன் என்றால் அது பொன்ராம் தான். அனைத்துத் தரப்பையும் கவரும் விஷயங்கள் பொன்ராம் படத்தில் இருக்கும்” என்றார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம்.
“இன்று நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தம்பி சிவகார்த்திகேயன் தான். முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் சிவா, சூரி காமெடி களைகட்டும். வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. கூட்டணி தாண்டி, இவரோடு நிச்சயம் வேலை செய்யலாம் என்ற அளவில் என்னையும் இந்தப் படத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மகிழ்ச்சி” என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.
” ‘பொன்ராம் சாரும், ராஜா சாரும் நெகடிவ் கேரக்டர் ஒண்ணு இருக்கு. பண்றீங்களா?’ எனக் கேட்டனர். ரொம்ப சவாலான கதாபாத்திரம். ‘நான் கண்டிப்பா பண்றேன்’ என்றேன். சவாலான கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும், அதனால் தான் பண்றேன். இது ஒரு பக்கா கமெர்சியல் படமாக வந்திருக்கிறது” என்றார் நடிகை சிம்ரன்.
“காதல், காமெடி என வழக்கமான படமாக இல்லாமல் ஏதாவது புதுசா பண்ணனும்னு நினைத்தோம். அதைத் தயாரிப்பாளரிடம் சொன்னபோது பட்ஜெட் பற்றித் தயங்காமல் உடனே ஓகே சொன்னார். மண்ணுக்காகப் போராடுவது அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. அப்படி ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கு. கதை கேட்டவுடன், ‘நெகடிவ் கேரக்டர் நான் பண்றதில்லையே!’ என்றார் சிம்ரன் மேடம். பின்னர் கதையின் விஷயங்களைப் புரிந்து கொண்டு நடிக்கிறேன் எனச் சொன்னார். ஒரு நாயகியைப் பாடலுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க என்ற குறை இருக்கு. இதில் சமந்தாவுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. அதற்காக அர்ப்பணிப்புடன் சிலம்பம் கற்றுக் கொண்டார். பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகும்போதும், ராஜா சார் ‘பண்ணுங்க’ என நம்பிக்கையோடு சொன்னார். குடும்பம், குழந்தைகள் என எல்லோரும் வந்து பார்க்கும் படமாக சீமராஜா இருக்கும்” என்றார் இயக்குனர் பொன்ராம்.
“இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்களுக்கு, எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பெருமை. இந்தப் படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிடத் திட்டமிட்டபோதே இடையில் ஸ்ட்ரைக் வந்தது. அதையும் தாண்டி படத்தைக் குறித்த தேதிக்கு வெளியிட உழைத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தில் நான் ஒரு தமிழ் மன்னராக நடித்திருக்கிறேன். அது எனக்கு பெருமையான விஷயம். ரஜினிமுருகன் படத்தின்போதே இந்த ஐடியா பற்றி பொன்ராம் சாரும், நானும் பேசினோம். இந்தப் படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்தப் படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரைப்பார்த்தும் பயப்படுவதில்லை, பொறாமையும் கிடையாது, என் அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன்” என்றார் நாயகன் சிவகார்த்திகேயன்.