Shadow

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

VVS

கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். 

சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.

போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இனியும் ஜோக்கர் இல்லை என்பதை இன்னொருமுறை நிரூபித்துள்ளார். திரையரங்கில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் செயலாளராக சூரி. தனது வழக்கமான பேச்சையும் நடிப்பையும் கிஞ்சித்தும் மாற்றாமல் இப்படத்திலும் தொடர்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக தான் உள்ளது. அதற்கு காரணம் இயக்குநர் ராஜேஷின் வசனங்கள். பெரிதாக சுவாரசியமோ திருப்பமோ இல்லாத திரைக்கதை வசனங்களால் மட்டுமே நகர்த்தப்படுகிறது.

படத்தில் வரும் மற்றொரு நாயகனாக சத்யராஜை சொல்லலாம். சிவனாண்டி என்னும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். சத்யராஜை தாங்குவதே அவரது அல்லக்கைகளாக வருபவர்கள் தான். முக்கியமாக காதல் தண்டாயுதபாணி சத்யராஜை ஏற்றிப் பேசும் இடங்களில் ரசிக்க வைக்கிறார். துப்பாக்கி எடுத்துக் கொண்டு புல்லட்டில் மிரட்டும் தொனியில் படம் முழுவதும் வலம் வந்தாலும் தனது லொள்ளினையும் விட்டு விடாமல் பார்த்துக் கொள்கிறார். சில காட்சிகளில் நாயகனாகவும், சில காட்சிகளில் காமெடியன் வில்லன் போலவும் தெரிகிறார். 

அறிமுக நாயகியாக ஸ்ரீதிவ்யா. படிக்க வேண்டும் என ஆசைப்படுபவர் தனது கல்யாணத்தை நிறுத்திய ஒரே காரணத்திற்காக நாயகனைக் காதலிக்கிறார். அப்போ படிப்பின் மீதிருந்த பிடிப்பு என்னானது எனத் தெரியவில்லை!? தமிழ்ப்பட நாயகிகள் காரணக் காரியங்களின்றி காதலில் விழ எப்பொழுதும் தயாராகவே உள்ளனர். தான் கதாநாயகியாக நடித்த படத்தினை விட, சில காட்சிகளிலே வந்தாலும் இப்படத்தில் பிந்து மாதவி ஈர்க்கிறார். 

இயக்குநர் பொன்ராமின் முதல்படம். தற்போதைய ட்ரென்ட் காமெடி என முக்கால்வாசி படங்கள் அப்படியே வந்து சலிப்பைத் தருகின்றன. ஆனால் இப்படத்தை இயக்குநர் திறமையாக ஒப்பேற்றி விட்டார் என்றே சொல்லணும். அதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஒன்று இமானின் பாடல்கள். புதிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லையென்றாலும், ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடலும், ‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ பாடலும் தியேட்டரில் அதகளப்படுகிறது. இன்னொன்று ராஜேஷின் வசனங்கள். வாரிசு அரசியலையும், பொம்மையாய் ஆட்டி வைப்பாங்க பெண் என சமகால அரசியலையும் உரண்டைக்கு இழுத்துள்ளார் ராஜேஷ். ஆனால் காதல் வருவதற்காக அவர் சொல்லும் காரணங்கள் மட்டும் மாறவேயில்லை. ஓகே.ஓகே.வில் நாயகி தளதளன்னு இருப்பதால் நாயகனுக்கு காதல் வருகிறது என்றால், இப்படத்தில் ‘புடவையில் கும்முன்னு’ நாயகி இருப்பதால் நாயகனுக்கு காதல் வருகிறது. அதுவும் பள்ளிப் படிப்பை முடிக்கும் வயதிலுள்ள நாயகி. இத்தகைய அபத்தங்களையும் மீறி படத்தின் ஓரிரு காட்சிகளில் இயக்குநர் கவனம் பெறுகிறார். உதாரணமாக கிணற்றில் விழும் மாட்டை மீட்கும் காட்சி. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும் விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பும், படத்தினை தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் செல்ல வைக்கிறது. மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் காட்டில் மழை என்று தான் சொல்ல வேண்டும்.

Leave a Reply