வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் களமிறங்கியுள்ளது அக்குழு.
வேலையும் கவலையும் இல்லாத ரஜினிமுருகன் எப்படி தன் தாத்தா சொத்தை விற்கின்றான் என்பதுதான் படத்தின் கதை.
தோத்ரியும் ரஜினிமுருகனும் செய்யும் அலப்பறைகள் தான் படம். போதாக்குறைக்கு, இவர்களுடன் ஏழரை மூக்கனும் சேர்ந்து கொள்கிறார். தனி ஆவர்த்தனமாக ரஜினி வெறியராக வரும் வக்கீல் நீலகண்டனும் அசத்துகிறார். எனினும் படத்தின் நீளம் 159 நிமிடங்கள் என்பது இப்படத்திற்குச் சற்றே அதிகம்.
கதைக்குள் வில்லன் வலுவாக வந்த பின்னும், ‘வெயிட்’ எனச் சொல்லிவிட்டு காதலிக்கவும், பாட்டு பாடவும் போய் விடுகிறார் ரஜினிமுருகன். இந்தப் பொறுப்பற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். நாயகனால் காதலிக்கப்பட கீர்த்தி சுரேஷ்.
தோத்ரியாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். வேதாளம் படத்திலேற்ற பாத்திரத்தினைப் போல், தனக்கு வராதததை மிகைப்படுத்தி முயலாமல் சூரி இது போல் பாத்திரங்களில் கவனம் செலுத்தினால் நலம். நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரணும், நாயகனின் தந்தையாக வரும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தமும் கூட படத்தின் கலகலப்புக்கு உதவியுள்ளனர்.
ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி பட்டையைக் கிளப்பியுள்ளார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்திப் பார்க்கவே முடியாது. வக்கீல் நீலகண்டனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் அச்யுத் குமாரும் அற்புதமான தேர்வு. பார்வையாலேயே சொல்ல விரும்புவதை சொல்லி விடுகிறார்.
சூரிக்கொரு காதல் ட்ராக்கென காமெடிக்கு ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் பொன்ராம். இப்படி, படத்திற்குத் தேவையில்லாத தனித் தனி நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. காட்சிகளை இன்னும் கோர்வையாக்கி, கதைக்குத் தேவையானதை மட்டும் உபயோகித்து படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகி விடுமென இயக்குநர் ஞாபகம் வைத்துக் கொள்வது நலம்.
படத்தின் பெயர் போடும் பொழுது வரும், குண அமுதனின் புகைப்படங்கள் அட்டகாசமாய் உள்ளது. பொங்கல் தினத்தில் வெளியான படத்திற்கு, இதை விட அற்புதமாய் வேறெப்படி சிறப்பு செய்ய இயலும்? (சல்லிக்கட்டுப் புகைப்படங்களும் அதில் அடக்கம்).