32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

Dinesh R சேலம் Published: 17/07/2026 2 நிமிட வாசிப்பு Updated: 24/07/2026 இது புதிது
எழுத்து அளவு:

அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, ‘முடியும்’ என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும்.

காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்கமாகப் பேசிப் பார்வையாளர்களின் மனதைக் கனக்கச் செய்துவிடுகிறார் காளி வெங்கட். ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு, பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிக அபூர்வமான கலைஞரென்பதை இப்பத்திலும் அழுத்தமாகப் பதிந்துள்ளார் காளி வெங்கட்.

கந்தன், அமரவள்ளியாக ஆரவும், ரம்யா பாண்டியனும் மலைவாழ்வாசி கணவன் மனைவியாக நடித்துள்ளனர். தலைப்புச் சுட்டும் நாயகனெனப் பார்த்தால் அது கலெக்டர் முத்துவேலாக வரும் அருள்நிதியே! படத்தின் முதற்பாதியில் குணசித்திரக் கதாபாத்திரம் போல் தோன்றினாலும், படத்தின் இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். ‘நம்மை எல்லாம் இந்தப் பதவியில் உட்கார வைத்திருக்கும் இந்தக் கல்வி, அந்த மக்களுக்கு இன்னும் கிடைக்கலையே!’ என மக்களுக்கு நல்லது செய்ய முடியாமல் ஏற்படும் யதார்த்தச் சிக்கல்களை எதிர்கொள்ளும் கலெக்டராக அருள்நிதியின் பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இயலாமையைத் தன் நடிப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார் அருள்நிதி. க்ளைமேக்ஸில், அவருக்கு முதியவர் வேடம் மட்டும் பொருந்தாமல் உறுத்தியது.

கடவுளின் அருளைப் பெற ஒருவன் பரிபூரணமாகத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும். அப்படிக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, மலையில் இருந்து தன்னந்தனியாக் கலெக்டரைப் பார்க்கப் பயணம் மேற்கொள்கிறாள் குறிஞ்ச்சியாக. குறிஞ்சியாக நடித்துள்ள பேபி கிருத்திகா தான் படத்தின் உண்மையான நாயக கதாபாத்திரம். “மலையில் கொடிய மிருகங்களைக் கண்டு கூட நான் பயந்ததில்லை. ஆனா, சமதளத்தில் வாழும் மனிதர்களைப் பார்த்தால் ரொம்பப் பயமாக இருக்கு” எனச் சொல்லும்பொழுது பார்வையாளர்களின் மனதை முற்றிலுமாக வென்று விடுகிறார் கிருத்திகா.

‘தேன்’ படத்து இயக்குநரான கணேஷ் விநாயகன், தனது நண்பர் ஒளிப்பதிவாளர் M.சுகுமாருடன் இணைந்து, அதி அற்புதமான குறிஞ்சி நிலப்பகுதியை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர். அரசாங்கம் முயற்சி எடுத்தும் நடக்காத பொழுது, குறிஞ்சி விரும்பிய கல்வி அவளுக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் படத்தின் நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸ்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

1 கருத்து

கருத்துகள் மூடப்பட்டுள்ளன.