32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

The Odyssey விமர்சனம்

Dinesh R சேலம் Published: 19/07/2026 3 நிமிட வாசிப்பு Updated: 24/07/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

வால்மீகி ராமாயணம் கி.மு. ஆறாம் நுற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பே பல நுற்றாண்டுகளாக வாய்வழிக்கதையாக ராமாயணம் மக்களிடையே புழங்கி வந்தது. அதே போல, கிரேக்க இதிகாசங்களான ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி என்ற இரண்டு காவியங்களும் சற்றேறக்குறைய அதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. இந்த இந்தியக் கிரேக்க இதிகாசங்களுக்குள் ஆச்சரியமான ஒற்றுமைகள் பல உள்ளன. கதையின் நாயகி கடத்தப்படுதல், அவளை மீட்க நடக்கும் போர், கதை நாயகன் குடும்பத்தை, நாட்டைப் பிரிந்து அலைந்து திரிதல், பல சவால்களைச் சந்தித்தல், திருமணம் புரிய வில்லை வளைத்து நாண் ஏற்றும் போட்டியை எதிர்கொள்ளுதல் என பல ஒற்றுமைகள் உள்ளன. இந்து மதத்தைப் போலவே, கிரேக்க மதத்திலும், ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பவையாக விதி, கடவுளின் அருள், தனிமனித முயற்சி ஆகிய மூன்றும் விளங்குகின்றன. இந்த மூன்றின் வலைப்பின்னல் போலவே ஒடிஸி கதையும் எழுதப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இராமயண ராமரை, பல தடைகளை வென்ற மனிதராகவும் காணலாம். அவரைக் கடவுளின் அவதாரமாகவும் காணலாம். அதே போல ஒடிசியஸ் சாதாரண மனிதர் மற்றும் கடவுள் என்று அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நம்புகிறார்கள். கிரேக்கப் புராண கதைகளில் இந்து மதப் புராணக் கதைகள் போலவே இயற்கையின் சக்திகள் அனைத்துக்கும் ஒரு கடவுள். கிரேக்கக் கடவுள்கள் மனிதர்களின் வாழ்வில் நேரடியாக விளையாடுவார்கள், கோபம் கொள்வார்கள், வழிகாட்டுவார்கள், கூடவே இருப்பார்கள். இந்தப் புரிதல் ஒடிசியஸ் கதையைப் படிக்கவும், இப்ப வந்திருக்கும் நோலனின் படத்தைக் காணவும் அவசியம்.

நோலன், ஒடிசியைக் குற்றவுணர்வுள்ள மனிதராகத் திரையில் உலாவ விட முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சியில் அவர் முழுமையாக வெற்றி பெறவில்லை. அவரது நான்-லீனியர் எடிட்டிங் ஜாலம் கதையை முன் பின் சொல்ல அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது எனினும், குற்றவுணர்வுள்ள நாயகனின் மனதை அது பிரதிபலிப்பதில் இருந்து நீர்த்துப் போகச் செய்கிறது. இளைஞனாகப் போருக்குக் கிளம்பும் ஒடிஸி, இருபதாண்டுகளுக்குப் பின்பே அவரால் மீண்டும் தனது நாட்டிற்குத் திரும்ப முடிகிறது. அந்த இருபதாண்டு கால அனுபவம், கடல் கடவுளின் சாபமும், அவர் ஏற்படுத்திய இடையூறு, ஒடிசிக்குக் கிடைக்கும் உதவி என ஒடிஸியைப் புதிய மனிதனாக மாற்றியுள்ளது. நாடு திரும்பியதும், தன் மனைவி பெனிலோப்பிடம் அறமற்ற முறையில் ட்ராய் போரை வென்றதற்காகப் பாவ மன்னிப்பைக் கோருகிறார் ஒடிஸி. படம் அங்கேயே முடிந்திருந்தால், நோலன் எதிர்பார்த்த காவியத்தன்மை ஒடிஸி படத்திற்குக் கிடைத்திருக்கக்கூடும். பெனிலோப்பைத் திருமணம் செய்ய நினைப்பவர்களைக் கதவுகளை மூடிவிட்டு வேட்டையாடுகிறார் ஒடிஸி. அதுவரை மெதுவாக நகரும் படத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஆராவரிக்கத் தொடங்குகிறார்கள்.

இயக்குநரின் அரசியல் சரித்தன்மைகள், கதாபாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் பொழுது அது சரியான இலக்கை எய்திவிடும். ஒடிஸியின் காலகட்டத்தை, இன்றைய அறிவுத் தெளிதலின் புரிதலோடு அணுகும்பொழுது ஏற்படும் போதாமைகளை இல்லாமல் போகச் செய்ய திரைக்கதையில் வலுவானதொரு மேஜிக் அவசியமாகிறது. இந்தப் படம், இயக்குநரின் அரசியல் சரித்தன்மையுடன், கதாபாத்திரத்தின் மனநிலை பொருந்திப் போகும் அந்தப் புள்ளியைத் தவறவிட்டுள்ளது. ஒடிஸியை விடவும், ராபர்ட் பேட்டின்சன் ஏற்றுள்ள ஆன்ட்டினஸ் பாத்திரத்தின் மனநிலை குழப்பமின்றி அற்புதமாகத் திரையில் பதியப்பட்டுள்ளது. டாம் ஹாலண்ட் ஏற்றுள்ள ஒடிசியின் மகனான டெலிமக்கஸ் கதாபாத்திரம், கிரேக்கக் கடவுள் ஏத்தனாவின் உதவியோடு தன்னை வரும் கொலையாளிகளிடம் இருந்து தப்பித்தாக மூலத்தில் வரும். நோலனோ, டெலிமக்கஸை ஒடியஸே காப்பாற்றுவது போல் மாற்றியுள்ளார். டாம் ஹாலண்ட்டை அப்பாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பொழுது, குறைந்தபட்ச ஹீரோயிஸத்தையாவது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். தனது தந்தையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என நினைக்கும் டெலிமக்கஸ், தன் தந்தையை உணரும் காட்சியைச் சட்டெனக் கடந்து விடுகிறார் நோலன். தன் தந்தை உயிருடன் உள்ளார் என உளமாற நம்பும் ஒரு பாத்திரம், குடும்பத்தைப் பார்க்கும் பேராவலுடன் இருக்கும் ஒரு பாத்திரம் சந்திக்கும் பொழுது இயல்பாய் ஏற்பட வேண்டிய உணர்ச்சிப் பெருக்கைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை நோலன். ஒடிஸியின் அந்த நீண்ட பயணமே, மனைவியைத் திருமணம் புரிய நினைத்து, அந்தக் கோட்டையிலேயே நிரந்திரமாகத் தங்கி விடுபவர்களைக் கொல்வதற்காகத்தான் என்பது போல் சுருங்கி விடுகிறது. மனைவியைச் சந்தேகித்தல் என்பதில் மீண்டும் ராமாயணமும் ஒடிஸியும் ஒற்றுமை கொள்கின்றன.

அவரது முந்தைய படங்கள் போல் ஒரு நிறைவை அளிக்காவிட்டாலும், போதாமைகளை மீறி ஒடிஸி ஏற்படுத்தும் தாக்கம் அவரது முந்தைய படங்களுக்கு நிகரானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.