32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டிசி விமர்சனம் | DC review

Dinesh R சேலம் Published: 09/08/2026 2 நிமிட வாசிப்பு Updated: 12/08/2026 சினிமா
எழுத்து அளவு:

நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியவண்ணம் இருந்தது. அதற்குத் தீனி போடும் வகையில், ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்சன் மேளாவை அரங்கேற்றியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தாஸ் (D), சந்திரா (C) எனும் மையப் பாத்திரங்களினுடைய பெயர்களின் முதலெழுத்தே தலைப்பாகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

லோகேஷ் கனகராஜ் மற்றும் மூவர் 2011-இல் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். கொள்ளையடித்தது காவலர்களிடமிருந்து. பெரும் ஆயுதங்களைக் கொள்ளையடித்த அவர்களைக் காவல்துறை வலை வீசித் தேடுகிறது. சென்னையில் லோகேஷ் & டீமை கொஞ்சநாள் கமுக்கமாக இருக்கச் சொல்கிறார் அவர்களது லீடரான தலைவாசல் விஜய். சென்னைக்குச் செல்லும் லோகேஷ் ஒரு லாட்ஜில் தங்குகிறார். அந்த லாட்ஜில் பாடகியாகப் பணி புரியும் சஞ்சனா ஏ.கே மீது காதல் கொள்கிறார். அதனால் ஒரு பிரளயம் நடக்கிறது. அதன்பின் திரைக்கதையில் ஏற்படும் ரணகளங்கள் தான் படத்தின் பயணம். ஒரு சிறுவனின் படிப்பிற்குப் பணம் சேர்க்க வேண்டும்; இது, ஹீரோவின் அடிப்படை டார்கெட் என்பதும் கதையில் உண்டு.

கதைநாயகனாக சில காட்சிகளிலும் கதாநாயகனாக பல காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் பட ஃபைட் ரெஃபரன்ஸோடு ஒரு ஷாட்டில் ஒரு மேனரிசத்தைக் காட்டி அப்ளாஸ் வாங்குகிறார். முதல் படத்திலே ஆக்சன் ஹீரோ மெட்டிரியலாகிவிட்டார். நாயகி வாமிகா கபி மிகச்சரியான தேர்வு. அவரின் நடிப்பு தான் பின்பாதி படத்தை நகர்த்துகிறது. சஞ்சனா ஏ.கே சற்றுநேரம் வந்தாலும் அசத்திவிடுகிறார். லோகேஷ் க்ருப்பிலுள்ள மூவரின் நடிப்பும் தூள். காவலதிகாரியாக வரும் கிரிஷ் தயால் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தலைவாசல் விஜய் உள்ளிட்ட சிறுசிறு கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

முகேஷ்ஜி ஒளிப்பதிவில் புதுப்பாய்ச்சலைச் செய்திருக்கிறார். அவரின் எவர்-க்ரீன் ஃப்ரேமிங், தமிழ் சினிமாவில் நெடுங்காலம் பேசப்படும். படத்தை ஒன்மேன் ஆர்மியாகத் தோளில் தூக்கிச் சுமந்திருப்பது இசையமைப்பாளர் அனிருத் தான். மனிதன் பின்னணி இசையில் பின்னியெடுத்துள்ளார்.

கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் டார்கெட், அதற்கு ஏற்படும் தடைகள் என முன்பாதி படம் அவ்வளவு நேர்த்தியாக அமைந்திருந்தது. பின்பாதியில் சின்னச் சின்ன எமோஷ்னல் ஷிஃப்டிங் பார்வையாளர்களைக் கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது. கதாநாயகனிடம் வெளிப்படும் தாளாத வன்முறை குணத்திற்கான காரணம் சொல்லப்பட்டாலும், அதை முழுமனதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

திரையெங்கும் ரத்த அபிஷேகம் நடக்கிறது. இருப்பினும் ஜென்-ஸீ தலைமுறையினரின் அச்சுறுத்தும் கைத்தட்டல் அரங்கை கோலாகலமாக நிறைக்கிறது.

– வெண்பா தமிழ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.