32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Immortal விமர்சனம்

Dinesh R சேலம் Published: 04/09/2026 2 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை.

மஹிக்கு முன்பு அவ்வீட்டில் மாட்டிக் கொள்ளும் ஆகாஷ், சிந்துவை வாம்பயர் பறவை (குருதியுண் பறவை) என்கிறான். மேற்குலக தொன்மவியல் நாட்டார் கதைகளில் வரும் ரத்தக்காட்டேரி போல் என்று சொல்லலாம். ஆனால் ஹாலிவுட்டைப் பொறுத்தவரை அவ்வகை ரத்தக்காட்டேரிகள் சூரிய வெளிச்சத்தில் வர அச்சமுறும். இயக்குநர் மாரியப்பன் சின்னா, தன்னுடைய குருதியுண் மிருகத்திற்கு அப்படி எந்த இலக்கணத்தையும் வகுக்கவில்லை. எவர் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய குடியிருப்பு வளாகத்தைச் சூனியக்காரியைப் போல் சிருஷ்டிக்கிறார் சிந்து. சூனியக்கார வாம்பயர் என்பது புத்தம்புது ஐட்டமாக உள்ளது. அதைச் சுவாரசியமான கதாபாத்திர வார்ப்பாக உருவாக்கவோ இயக்குநர் மெனக்கெடாமல், சிந்துவாக நடித்துள்ள கயாடு லோஹரின் உதடுகள், கவர்ச்சி உடை மீது கேமரா கோணங்களால் கவனம் செலுத்தியுள்ளார். சிந்துவிற்கு ஏன் மஹியின் மீது மட்டும் காதல் வருகிறது என்பதற்கும் தெளிவில்லை.

ஆகாஷாக T.M.கார்த்திக்கும், மஹியின் மாமாவாக லொள்ளு சபா மாறனும், மஹியின் நபனாக ஆதித்யா கதிரும், மஹியாக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். ஆனால், படம் முழுவதும் மஹியும் சிந்துவுமே இருப்பதால் மற்ற பாத்திரங்கள் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. ஜி.வி.யும், கயாடு லோஹரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி அசத்தியுள்ளனர்.

படத்தின் முன்பாதியில் இன்ஸ்டன்ட் ரொமான்ஸாகவும், இரண்டாம் பாதியில் நாயகனின் சர்வைவல் போராட்டமாகவும் காட்டியுள்ளனர். கயாடு லோஹர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதால், நாயகன் தப்பிக்க வேண்டுமே என்ற எண்ணமும் ஏற்படவில்லை; குருதியுண் மிருகமாக இருந்தாலும் அவளும் ஒரு பெண் தானே என்று சிந்துவின் காதல் கைகூடவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை.

மைய ஐடியாவோடு மட்டும் திருப்தியுறாமல், சுவாரசியமான திரைக்கதையால் பார்வையாளர்களுக்கு மேலும் ஆழமான ஓர் அனுபவத்தை வழங்கியிருக்கலாம். திரைக்கதையின் எல்லாப் போதாமைகளையும் கயாடு லோஹரை அரணாகக் கொண்டு தற்காத்துள்ளார் மாரியப்பன் சின்னா. அவ்வரணுக்கு அணி செய்யும் விதமாக சாம் C.S.-இன் சிறப்பான பின்னணி இசை உதவியுள்ளது. பெரும்பான்மையான படம் ஒரு வீட்டுக்குள் நடப்பதாக உருவகித்தற்காகவும், வாம்பயர் போன்ற ஜானரைத் தமிழ்ப்படத்தில் சோதனை முயற்சி செய்ததற்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.