32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஏன் என்னை ஏதோ செய்தாய் | Yen Ennai Edho Seidhai review

Dinesh R சேலம் Published: 04/09/2026 3 நிமிட வாசிப்பு Updated: 06/09/2026 இது புதிது
எழுத்து அளவு:

படத்தின் தலைப்புத்தான் படத்தின் கருவும் கூட! நாயகியைப் பார்க்கும் நாயகனுக்கு, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனத் தோன்றுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மது எனும் பாலியல் தொழிலாளியைச் சந்திக்கும் கார்த்திக்கிற்கு, அவள் மீது காதல் வருகிறது. மதுவும் கார்த்திக்கை விரும்ப, இருவரும் லிவிங் டுகெதரில் இணைகின்றனர். இவ்வுறவு கல்யாணத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்க, குடிப்பழக்கமுடைய கார்த்திக்கோ போதையில், மதுவிடம் கோபத்தில் வார்த்தையை விட்டுவிட, மனதுடையும் மது கார்த்திக்கை விட்டுச் சென்று விடுகிறாள். அந்தப் பிரிவாற்றாமை கார்த்திக்கை என்ன செய்கிறது என்றும், அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பதும்தான் படத்தின் கதை.

மது கதாபாத்திரம், வங்காள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டது. அதனாலோ என்னவோ, படத்தின் வசனங்களில் ஏகத்திற்கு ஆங்கிலத்திலேயே உள்ளன. லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் என்பதால், பின்னணி இசையைக் கழித்துவிட்டு வசனங்களை உற்றுக் கேட்கப் பழகும் வரை கொஞ்சம் சிரமப்பட வேண்டியுள்ளது.

மிகக் குறைவான கதாபாத்திரங்களே உள்ளனர் படத்தில். கடல் வரும் காட்சியைத் தவிர்த்து, மற்ற அனைத்துக் காட்சிகளுமே வீட்டுக்குள் கதாபாத்திரங்களின் க்ளோஸ்-அப் ஷாட்களாலேயே நிரம்பியுள்ளன. அப்படியிருக்கும் பட்சத்தில், படத்தின் நீளம் இரண்டரை மணி என்பது சற்றே அதிகம்.

எழுதி, இயக்கி, கார்த்திக் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துப் படத்தொகுப்புப் பணியினையும் செய்துள்ளார் D.அந்தோணி. கதைக்கருவாகவும், அதை விஸ்தரித்து எழுதிய விதத்திலும் ‘அட!’ போட வைத்துள்ளார் அந்தோணி. கதாபாத்திர வார்ப்பும், சில வசனங்களும் மிக முதிர்ச்சியாகக் கையாளப்பட்டுள்ளது. தாயை இழந்து தனிமையிலும் இருளிலும் வாடும் இளைஞனான கார்த்திக், மதுவிலும் புகையிலும் தன்னைக் கரைத்துக் கொள்கிறான். மற்றவர் மனம் புண்படுமோ என்றெல்லாம் யோசித்துப் பேசாத, எதற்கும் கவலையற்ற ஆளாக இருக்கின்றான். படம் முழுவதும் மதுவும், புகையும் ஒரு பக்கம் என்றால், சென்சாரில்லாத கார்த்திக்கின் பேச்சு மறுபுறம், இப்படத்திற்கு A சான்றிதழைப் பெற்றுத் தந்துள்ளது. கார்த்திக் வீட்டுச் சுவரில், Bar is a temple என்ற வாசகத்தைப் பெரிதாக ஒட்டி வைத்திருக்கிறான்.

அப்படியிருக்கும் கார்த்திக்கை, தனது காதலின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறாள் மது. ஆனால், குடிப்பழக்கத்தாலும், முன்யோசனையற்ற பேச்சாலும் அவ்வெளிச்சத்தை மீண்டும் இழக்கின்றான். பாலியல் தொழிலாளியாக அறிமுகமாகும் மது, மெல்ல பார்வையாளர்களையும் வசீகரித்து விடுகின்றார். அவர் மீது ஏற்படும் அபிமானம் கூட, வாய் நீண்ட கார்த்திக் மீது பார்வையாளர்களுக்குக் கடைசி வரை எழவில்லை. அவ்வகையில் அந்தக் கதாபாத்திரத்திற்குத் தனது நடிப்பால் அந்தோணி வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும், தனது எழுத்தைக் காட்சிரூபமான கலையாக அவரால் மாற்ற முடியவில்லை. கதாபாத்திரங்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே உள்ளனர். அவரது மேக்கிங் ஸ்டைலில் கெளதம் வாசுதேவ் மேனனின் தாக்கம் நிறையத் தெரிகிறது. இசை, படத்தை ஆக்கிரமித்தது போல் அடர்த்தியாகப் படர்ந்துள்ளது. ஜெய்கர் பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசையை ஜோ ரேடா வழங்கியுள்ளார். ஷ்ரேயாவாக நடித்துள்ள சிறுமி ரியா மனோஜும், கார்த்திக்கால் அசிங்கப்படுத்தப்படும் நண்பனின் மனைவி ரேகாவாக நடித்துள்ள நவ்யா சுஜியும்  சிறப்பாக நடித்துள்ளனர். நாயகியாக நடித்துள்ள மதுமிதா தாஸ் மிகக் கச்சிதமான தேர்வு.

உண்மையில், கார்த்திக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் காதல் ஒரு காரணம் என்றாலும், ஸ்ரீனி எனும் நண்பர்தான் கார்த்திக்கிற்கு எல்லாமுமாக எப்பொழுதும் உடன் நிற்கிறார். நட்சத்திரம் நகர்கிறது படத்தில் மாஸ்டர் ஷீராக நடித்திருந்த ரெஜின் ரோஸ்தான், இப்படத்தில் ஸ்ரீனியாக நடித்துள்ளார். இதைக் காதல் படமாகவோ, இருளில் இருந்து வெளிச்சத்தை அடையும் இளைஞனின் படமாகவோ கொள்வதை விட, நட்பை மகிமைப்படுத்தும் படமென்று சொல்லலாம். கதாநாயகி மதுவையும் சமாதானப்படுத்துவதும் ஸ்ரீனியே! மனித மனதிற்கு, உற்றத் துணையாய் எப்பொழுதும் உடனிற்பவரின் அருமை எந்நாளும் புரியாது என்பதே இப்படம் சொல்லாமல் சொல்லும் நீதியாகும். விட்டுச் செல்பவரை நினைத்து, ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ எனப் பிலாக்கணம் செய்ய வைக்கும் போதை வஸ்துவைக் காதலெனக் கொண்டாடும், இப்படத்தைப் போல்!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.