போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்
அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள்.
அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், ...