Shadow

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள்.

அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து அவர் மீண்டு பத்திரமாகக் களக்காடு சென்றடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் முடிவு.

கூத்துக் கலைஞர் நளினமூர்த்தியாக கருணாஸ் கலக்கியுள்ளார். மிகச் சிறப்பான கதாபாத்திரத்தை அவருக்கு அளித்துள்ளார் இயக்குநர் மைக்கேல் K. ராஜா. கதையின் நாயகன் என்றே சொல்லலாம். நளினமூர்த்தியின் இம்சையைப் பொறுத்துக் கொள்வதும் சிரமம், மிகுந்த நல்லவர் என்பதால் வெறுக்கவும் முடியாது. சூழ்நிலையை உணராத அவரது வெகுளித்தனமே குமாரின் வாழ்வா, சாவா சிக்கலுக்குக் காரணமாகிவிடுகிறது. அதனால் அமரர் ஊர்தி ஓட்டுநரான குமாருக்கு வேலையில் சிக்கல் ஒருபுறம், அந்தப் பயணத்தின் மூலமாகக் கிடைக்கும் பணத்தின் தேவை ஒருபுறம், தந்தையின் உடலை எதிர்பார்த்துக் களக்காட்டில் காத்துக் கிடக்கும் பிள்ளைகளின் தவிப்பும் கோபமும் மறுபுறம். இப்படி ஒருவனை இலகுவாக நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடுகிறார் நளினமூர்த்தி. உலகமகா உத்தம கலைஞன் என்ற பெருமையும், மற்றவர்களுக்கு உதவத் தொடங்கிய பின் தானொரு தேவதையாகி விட்டோம் என்ற பெருமிதமும் உடையவர். கூத்துக்கலையையும் கலைஞனையும் எவரும் மதிப்பதே இல்லை என்ற ஆதங்கத்தையும் வலியையும் சுமப்பவர். கருணாஸ், இந்த இரண்டு எதிர் மனநிலையையுமே தன் நடிப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.

முன்னதாகப் பிரசவத்தில் இரண்டு குழந்தைகளை இழந்துவிடும் கலையழகி, மூன்றாவது குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தனியார் மருத்துவமனையில் சேருகிறார். தனது பிரசவச் செலவிற்காகச் சேர்த்து வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாயை ஒருவருக்கு உதவியாகக் கொடுத்த கலையழகிக்கு, தேவையின் போது அது கிடைக்காமல் போகிறது. பணத்தை ஈட்டுவதற்காக ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயம் கலையழகியின் கணவர் குமார்க்கு. கலையழகியாக மேரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார்.

கலையழகியின் கணவர் குமாராக விமல் நடித்துள்ளார். தன் மனைவி யாருக்கோ உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டதால், தனது வேலை, நேரத்திற்கு உடலைக் கொண்டு போய்ச் சேர்ப்பது மட்டுமே என இறுக்கமாக இருக்கிறார். நளினமூர்த்தியின் குணத்தால், பிறர்க்கு உதவுவது தவறில்லை என தன்னையும் தேவதையாக உணரத் தொடங்குகிறார். ஆனால் பூதகரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவர் அந்தச் சிக்கலில் இருக்கும்போது, அவரது மேலதிகாரியாக வரும் சார்லஸ் வினோத், உதவ முயன்று, அது முடியாமல் போனதும் விமலிடம் ஒன்று சொல்கிறார். ‘சனியன் பிடிச்சாலும் பிரச்சனை; சனியன் பிடிச்சவனோட நட்புல இருந்தாலும் பிரச்சனை’ என பொருள்படும்படி சொல்லி விமலைக் கழட்டிவிடுவார். படத்தின் வசனங்கள் யதார்த்தமாக ரசிக்கும்படி உள்ளன.

கர்ணனாகக் கூத்து கட்டிய ஒருவரின் கொடைக்குணம் எந்தளவு நீளும் என்பதை படம் சொல்கிறது. ஒரு மரண வீடு எப்படித் தயாராகும், அந்த மரணவீடுள்ள தெருவில் சுப நிகழ்ச்சி ஒன்று நிகழ்வதால் ஏற்படும் குழப்பம், இறந்தவரின் குடும்பத்திலுள்ள சிக்கல்கள், வீட்டை விட்டு காதலனுடன் ஓடி வரும் இளம்பெண் பற்றிய கிளைக்கதை, அந்தப் பெண் வீட்டினரின் வன்மமும் கோபமும் இழப்பும், குமார் – கலையழகி இருவருக்கிடையே உள்ள ஊடலும் புரிதலும் என இயக்குநர் மைக்கேல் K. ராஜா மிக அற்புதமாகத் திரைக்கதையைக் கொண்டு போயுள்ளார். நுணுகிப் பார்த்தால் சில பிழைகள் தென்படுமாகினும், பவன், தீபா சங்கர், மகா (டெல்லி கணேஷின் மகன்), ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி கோடங்கி வடிவேலு போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் படத்தில் தோன்றிய அனைவரின் சிறப்பான நடிப்பால் அது உறுத்தவில்லை. படத்தில் ஒரு ஊரே (களக்காடு) ஏமாற்றப்படுகிறது என்றாலும், பார்வையாளருக்கு நிறைவினை அளிக்கிறது படம்.