32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Spider-Man: Brand New Day விமர்சனம்

Dinesh R சேலம் Published: 01/08/2026 3 நிமிட வாசிப்பு Updated: 12/08/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளையில் இருந்து இன்னொருவரது மூளையை வேகவேகமாக ஆக்கிரமித்துக் கண்ணாமூச்சி ஆடுகிறார். யாரை எதிர்க்கிறோம் என்றே புரியாமல் ஸ்பைடர்-மேன் திண்டாடுகிறார். தன் வழியில் குறுக்கிட்டால், ஸ்பைடர்-மேன் என்ன இழக்க நேரிடும் என ஒரு கொடுமையான டெமோவையும் காட்டுகிறார் பிரிவின் துயரில் இருக்கும் அம்மர்ம நபர்.

மர்ம நபரின் அட்டகாசம் ஒருபுறம் என்றால், ஸ்பைடர்-மேனின் டி.என்.ஏ. உருமாற்றம் அடைந்து அவரை மேலும் இம்சிக்கிறது. உணர்வுத்திறன் அதிகமாகி, சின்னச் சின்ன சத்தம் கூட பூதாகர ஓசையாகக் கேட்டு, நட்பான ஸ்பைடர்-மேனைக் கோபக்காரராக மாற்றுகிறது. தனிமையோடும், தன்னோடும், மறைந்திருந்து சாமானியர்களைப் பகடையாக்கும் மர்ம நபரிடமும் ஒரே சமயத்தில் போராடுகிறார் ஸ்பைடர்-மேன்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்து ஏகத்திற்கும் கதாபாத்திரங்கள் வந்து செல்கின்றனர். ஹல்க், பனிஷர், X-Man இன் ஜீன் க்ரே, Hand-இன் இளம் நின்ஜா வாரியர்கள் என வலைப்பின்னலாகக் கதாபாத்திரங்கள். பனிஷரின் மூர்க்கமான தண்டிக்கும் வழிகளுக்கு அவர் வருந்துவது போல் காட்சியமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. நியூயார்க் டிடெக்டிவாக நடித்துள்ள லிஸா காலன்-ஸயாஸும் கவனிக்க வைக்கிறார்.

டாம் ஹோலண்ட், முந்தைய தொடர்களை விடவும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துள்ளார். சூப்பர் ஹீரோவாக அல்லாமல் ஸ்பைடர்-மேனும் மனிதன் தானே, அவனுக்கும் ஆசாபாசங்கள் இருக்கும்தானே என்ற கோணத்தை இப்படத்தில் மிக அழுத்தமாகவும் சென்ட்டிமென்ட்டாகவும் பதிந்துளார் இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன். ஸ்பைடியின் அதிரிபுதிரியான சாகசத்துக்கு நிகராகச் சென்ட்டிமென்ட் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அது குறையாகத் தெரியாத வண்ணம், ஒவ்வொரு ஃப்ரேமையும் ஸ்மூத்தாக இழைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ப்ரெட் பாவ்லக். ஸ்பைடர்-மேனுடன் நியூ-யார்க் தெருக்களில் கட்டடங்களுக்கு மத்தியில் பறந்து செல்வது போன்ற உணர்வைக் கேமரா கோணங்கள் ஏற்படுத்துகின்றன. மர்ம நபரால் பீடிக்கப்பட்டவர் எவரென்பதைக் காட்டுவதிலும் விஷுவலாக அசத்தியுள்ளனர். ஒரு சூப்பர் ஹீரோ படமென்ற நிறைவைத் தராவிட்டாலும், அதைத் தாண்டியதொரு நிறைவைப் படம் தருவதற்கு பார்வையாளர்களோடு பீட்டர் பார்க்கர் ஏற்படுத்தியிருக்கும் இணக்கமே காரணமாகும். அந்த ஸ்பைடி முகமூடிக்குள் இருப்பது, நட்பு – காதலுக்காக ஏங்கும் நம்மைப் போல் ஒரு சாமானியன். ஸ்பைடர்-மேனை மேன்மையாக்குவது, தான் அனுபவிக்கும் பிரிவாற்றாமையை மீறித் தன் சக்திக்கு மீறி விடாப்பிடியாகப் போராடி வெல்லும் அவரது குணமே!

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.