Shadow

சாட்டை விமர்சனம்

Sattai thirai vimarsanam

நடிகர்களின் பெயர்கள் போடும் பொழுதே அரசுப் பள்ளிகளின் மீது சாட்டையை வீசத் தொடங்கி விடுகிறார் அறிமுக இயக்குநர் அன்பழகன். லட்சிய ஆசிரியர் ஒருவர் அலட்சியமாக இயங்கும் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தால் என்னாகும் என்பது தான் படத்தின் கதை.

ஈசன் படத்தில் உதவி ஆணையாளர் சங்கைய்யா பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியது போலவே இப்படத்திலும் சமுத்திரக்கனி.. தயாளன் என்னும் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். புகார் பெட்டி ஒன்று வைத்து மாணவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறியும் உன்னத ஆசிரியராக வலம் வருகிறார். அமெரிக்கப் பள்ளியில் மாணவர்கள் தினம் 15 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என கையில் வைத்திருக்கும் ‘டேப்’பில் காண்பிக்கிறார். திக்கிப் பேசும் மாணவிக்கு ‘டங் ட்விஸ்ட்டிங்’ பயிற்சி அளிக்கிறார். 

இப்படி அவர் எது சொன்னாலும், செய்தாலும் ரசிக்க தயாராக உள்ளார் பள்ளி ஹெட்மாஸ்டராய் வரும் ஜூனியர் பாலய்யா. 22 வருட அனுபவத்தில் ஒன்றுமே சாதித்ததில்லை என சுய கழிவிரக்கம் கொள்ளும் இடத்தில் ஜூனியர் பாலய்யா அசத்தினாலும் போக போக சமுத்திரக்கனியின் சைலன்ட் ஜால்ராவாக ஆஃப் ஆகி விடுகிறார். சமுத்திரக்கனியைக் கண்டாலே வெறுக்கும் ஆசிஸ்டென்ட் ஹெச்.எம்.மாக தம்பி இராமைய்யா. வட்டிக்கு பணம் கொடுத்து, அந்தக் கணக்கை பள்ளி நோட்டீஸ் போர்ட்டிலேயே எழுதும் சர்வ அலட்சியம் மிக்க ஆசிரியர். மற்ற கதாபாத்திரங்கள் தரும் இயல்பான தாக்கத்தை தம்பி இராமைய்யாவின் சேஷ்டைகள் தரவில்லை. ஒருவேளை நகைச்சுவை என நினைத்து நடித்திருப்பாரோ என்னவோ!?

காதல் இல்லையேல் சாதல் என்பது தமிழ்ப்படங்களிற்கு பொருந்தும் போல. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பழனிமுத்துவிற்கும், அறிவழகிக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் வாத்தியாரின் பெயர் கெட்டுப் போகக் கூடாதென காதலை தியாகம் செய்கிறான் பழனி. தமிழ்நாட்டில் தியாக சீலர்களுக்கு பஞ்சமில்லை என புல்லரிப்பு ஏற்பட்டாலும், அந்த வயதில் தோன்றுவது காதல் இல்லை என ‘தயாளு சார்’ எடுத்துச் சொல்லாதது ஏனெனத் தெரியவில்லை. மாறாக நான் எட்டாவது படிக்கும் பொழுதே ரவுடி என சாட்டையை அந்தப் பையன் மீது வீசுகிறார் சமுத்திரக்கனி.

பழனியாக நடித்திருக்கும் யுவனின் மூர்க்கம் அச்சத்தையே ஏற்படுத்துகிறது. காதலிப்பதால் தனக்கு நாயகன் அந்தஸ்து கிடைக்கிறது என்ற தவறான எண்ணத்திலேயே அலைகிறான். வரும் அத்தனை படங்களும் மாணவர்கள் யாரையேனும் காதலித்தே ஆக வேண்டும் என்பது போன்ற அழுத்தத்தை தருபவையாக உள்ளன. இந்தப் படமும் அதற்கொரு விதிவிலக்கில்லை என்பது மிக வருத்தத்தற்குரிய விடயம். மாணவிகளுக்கு வரும் காதல் கடிதங்கள் சகஜம் தான். பெற்றோர்கள் தான் பிள்ளைகள் மீது நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென பெற்றோர்களுக்கு அட்வைஸ் வேறு செய்கிறார். அழகான பள்ளி மாணவி அறிவழகியாக மகிமா. படிப்பு தான் எனக்கு முக்கியம் என காதலில் விழுந்து(!?) தொலைக்கிறார்.

100% தேர்ச்சி. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பேசப்படும் விடயம். தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக தொடையைத் தட்டிக் கொண்டு அரசுப் பள்ளிகளும் இறங்கி விட்டன. இதனால் அரசுப் பள்ளிகளிலும் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்புகளில்  சரியாக படிக்க மாட்டார்கள் எனக் கருதும் மாணவர்களை அனுமதிப்பதில்லை. 

சமுத்திரக்கனி அடிப்பட்டு பாவம் மருத்துவமனையில் இருக்கார். ஆனால் பள்ளியின் வெற்றி 100% தேர்ச்சியில் தான் அடங்கியுள்ளது என வலியைப் பொருட்படுத்தாமல் கடமையை ஆற்ற வந்து விடுகிறார். என்ன இருந்தாலும் நாயகன் அல்லவா? போருக்குத் தயாராவது போல் பாசறை எல்லாம் அமைத்து படிக்கின்றனர். குன்றின் மீது உச்சிப் பாறையில் அமர்ந்து படிக்கின்றனர். மெழுகுவர்த்தி கொண்டு இரவெல்லாம் படிக்கின்றனர்.  யாராவது தப்பித் தவறி ஃபெயிலாகி விட்டால், சமுத்திரக்கனியின் சார்பாக நாமே திரைக்குள் சென்று அந்த மாணவரை அடித்து துவைத்து விடுவோம் போல. 

கல்வி இவ்ளோ சுமையா என பயம் கொள்ள வைக்கிறது. நல்ல குரு தோற்கக் கூடாது என மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பது எல்லாம்.. ஏதோ படம் சுபமாய் முடிந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் பொதுவில் தேர்வு முடிவுகள் வாழ்வா, சாவா என்ற முடிவிற்கு தள்ளும் அளவு மாணவனைப் பாதிக்கிறது. சாட்டை பட வேண்டிய இடங்கள் நிறையவே மிச்சம் உள்ளன.

சில வக்கிரம் பிடித்த ஆசிரியர்களால் மாணவிகளுக்கு நிகழும் கலவியல் தொந்தரவுகளை, மாணவிகள் தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.  ‘ரோட்டரி  கிளப்’ நடத்தும் போட்டிகளில் வெல்வதற்காகப் பேரம் பேசும் தனியார் பள்ளியின் கேவலமான வியாபார எண்ணத்தையும் இயக்குநர் பட்டும் படாமலும் சுட்டிக்  காட்டியுள்ளார். படத்தைத் தயாரித்தவர் ‘மைனா‘ பட இயக்குநர் பிரபு சாலமன். இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் ஆவதாலோ என்னமோ நல்ல படங்களும் ஒன்றிரண்டு வருவதும் போவதுமாய் உள்ளன.

Leave a Reply