
துர்ஜம வம்சத்தைச் சேர்ந்த மாலிக், சவாரி பழங்குடியின மக்களை அடிமையாக நடத்துகிறார். இந்தியச் சுதந்திரத்துக்குப் பின், அரசாங்கம் சவாரி இன மக்களுக்கு அடையாள அட்டை கிடைக்காதவாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இவ்வொடுக்கமுறைக்கு எதிராக சம்மக்கா போராடிக் கொண்டே இருக்கிறார். தனது தாயின் போராட்டத்தைத் தாமதமாகப் புரிந்து கொள்ளும் சம்மக்காவின் மகன் சடையன், மாலிக்கின் அதிகாரத்தை எதிர்க்கிறான். சவாரி இன மக்களுக்கு நியாயமும், அடையாள அட்டையும் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
யார் கொடூரமாகக் கொலை செய்கிறார்கள் என நாயகனுக்கும் வில்லனுக்கும் படம் நெடுகே கடும்போட்டி நிலவுகிறது. வெற்றி நாயகனுக்கே! காரண காரியமின்றி வன்முறையைக் கட்டவிழுத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. திரைக்கதையை எப்படி சுவாரசியப்படுத்தலாம் என யோசிபதற்குப் பதிலாக, எப்படி ஒவ்வொரு கொலையையும் கொடூரமாகக் காட்சிப்படுத்துவது என மெனக்கெட்டுள்ளனர். ஷிக்கஞ்சா மாலிக்காக மோகன் பாபு மிரட்டலாக அறிமுகமானாலும், அவரது பாத்திரமும் படத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சோட்டா மாலிக்காக நடித்துள்ள ராகவ் ஜுயலும் எந்த முக்கியத்துவமும் இன்றி மறைகிறார். தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவை நினைவுப்படுத்தும் வகையில் புடைப்பான மூக்குடன் வருகிறார் பிரியதர்ஷி புலிகொண்டா.
The Womb of Scars, The Butterfly, The Mother, The Empty Throne, The Paradise, The Womb of War என அத்தியாயங்களாகத் திரைக்கதையைப் பிரித்திருந்தாலும், எல்லா அத்தியாயத்தின் அடிநாதமாகவும் வன்முறையையே இழைய விட்டுள்ளனர். The Butterfly எனும் அத்தியாயத்தில், கயாடு லோஹர் மிகவும் ஃப்ரெஷாகவும் கவர்ச்சியாகவும் கையில் சிகரெட்டுடன் அறிமுகமாகிறார். அதே வேகத்தில் மறைந்தும் போகிறார். சம்மக்காவின் மகன் சடையனாக நானி நன்கு முறுக்கேறிய உடலுடன் பெரும் உழைப்பை வழங்கியுள்ளார். ஆனால் அம்மக்களின் வலியையோ, வேதனையையோ கடத்தாமல் சடையனின் கோபம் மட்டுமே கடத்தப்படுகிறது. படத்தின் பெரும் பலவீனமாக இது அமைந்துள்ளது.
