தமிழர்கள் வந்தேறிகளால் பாலை நிலத்திற்கு துரத்தப்பட்டதாகவும், அதனால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் படம் தொடங்குகிறது. ஆனால் முல்லைக்கொடி என்னும் கிராமத்தில் அவர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதாகவும் வசனங்களும் காட்சிகளும் வருகின்றன. இளைஞர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆமைகள் நீரிலிருந்து விலகி செல்வதைக் காண்கின்றனர். அது ‘பாலை’ வருவதற்கான அறிகுறி என சொல்கிறார் முதுவன் என்னும் பெரியவர். அதிலிருந்து தப்பிக்க ஒன்று வழிப்பறியில் இறங்கணும் அல்லது வந்தேறிகளுடன் போரிட்டு ஆயக்குடியை மீட்கணும் என்று ஆலோசனைச் சொல்கிறார் முதுவன். பாலையை எதிர்க் கொள்ளலாம் என முதுவனின் யோசனையை மறுக்கிறார் தலைவரான விருத்திரன்.
இதற்கிடையில் அகி மற்றும் அத்தி என்னும் தமிழ் இளைஞர்கள் வலன் என்னும் நண்பனின் பேச்சைக் கேட்காமல் வணிகனான வந்தேறி ஒருவனைக் கொன்று விடுகின்றனர். இதனால் போர் மூளும் அபாயம் உண்டாகும் எனக் கருதி விருத்திரன், வந்தேறிகளின் தலைவனான அரிமாவனிடம் சென்று மன்னிப்புக் கோருகிறார். கொலை செய்த மூவரையும் வணிகனின் மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் அரிமாவன். முதுவன் பேச்சைக் கேளாமல் அகி, அத்தி, வலன் மூவரையும் அழைத்து செல்கிறார் விருத்திரன். வணிகனின் மனைவி காலில் அம்மூவரும் விழும் பொழுது, அகியின் முதுகில் குத்தி கொன்று விடுகிறாள் வணிகனின் மனைவி. வலனையும் தலைகீழாக கோலில் கட்டி எடுத்து சென்று விடுகின்றனர். செய்வதறியாது திகைக்கும் விருத்திரன் வலனை மீட்க, பாலையில் இருந்து தப்பிக்க முதுவனின் பேச்சைக் கேட்கத் தொடங்குகிறார்.
“போர் புரிய எது தேவை!?”
“வீரம்” என்கிறார் விருத்திரன்.
“இல்லை சூது” என்கிறார் முதுவன். ஐவகை நிலங்களில் முல்லை தவிர்த்து மற்றதன் தொழில்களைச் சொல்லும் முதுவன், பாலையில் வழிப்பறி தவிர்த்து வேறு உபாயம் இல்லை எனச் சொல்கிறார். விருத்திரனுக்கு சூதைப் போதிக்கிறார் முதுவன்.
விருத்திரன் மூவருடன் சென்று வந்தேறிகளின் ஆநிரைகளைக் கவர்கிறார். ஆநிரைகளை ஒப்படைக்க வேண்டுமெனில் வலனை விடுவிக்க வேண்டுமென நிபந்தனை விடுக்கிறார். விருத்திரன் தவிர்த்து மற்ற மூவரும் ஆநிரைகளைக் கவர்ந்த மகிழ்ச்சியை கள்ளுண்டு கொண்டாடுகின்றனர். இவ்விடத்தில் வரும் வசனங்களில் இருந்து படம் தடம் மாற பார்க்கிறது.
யோசனையில் ஆழ்ந்திருக்கும் விருத்திரன், “வந்தேறிகளின் தலைவன் பெயரென்ன!?” எனக் கேட்கிறார்.
“அரிமாவன்.”
“அதன் அர்த்தமென்ன!?”
“சிங்கம்.”
“அவன் சிங்கம் என்றால் நாம் யார்!?”
“புலிகள்.”
“புலிகளுக்கும், சிங்கங்களுக்கும் சண்டை நடந்தால் யார் வெல்வார்கள்!?”
“புலிகள்.”
“சிங்கம் இந்நாட்டைச் சேர்ந்தது அல்ல. எங்கிருந்தோ வந்தது. புலிகள் இம்மண்ணைச் சேர்ந்தது. சிங்கம் மிக வலிமையானது. வந்தேறிய இடத்தைப் பிடித்துக் கொள்ளும். புலிகள் அலட்சியமானவை. சிங்கம் கூட்டமாக வேட்டை ஆடும். பெரும் இரை திண்ணும். புலிகள் தனித்து வேட்டையாடும். சிங்கம் வந்தேறிய இடத்தை ஆக்ரமித்துக் கொள்ளும். புலிகள் முதல் முறைத் தோற்கும். பின் வெறிக் கொண்டு தாக்கும். நீங்களும் அதே போல் தாக்கணும். தலைவனைத் தேடாதீர்கள். எதிரி எங்க எங்கன்னு தேடுங்க. எதிரி பெரும் படையோடு வந்தா பதுங்கி இருந்து தாக்குங்க” என்பது போல் தன் சகாக்களை தயார் செய்கிறார் விருத்திரன். எதைப் பற்றி சொல்கின்றனர் எனப் புரிந்தாலும் அவற்றிலுள்ள முரண் கொஞ்சம் குழப்பி விடுகிறது.
‘
மாத்தி யோசி‘ படத்திற்கு பிறகு ஷம்மு கதாநாயாகியாக. அவரது பாத்திரத்தின் பெயர் காயாம்பூ. பெயரிலேயே பூ உள்ளதாலோ என்னமோ மஞ்சள் நிறப் பூக்களில் தொடங்கி பல நிறப் பூக்களைச் சூடுகிறார் படத்தில். ஒரு காட்சியில் மல்லிகைச் சரத்தை தலையில் சுற்றி அதில் தாமரைப் பூவைச் சொருகியவாறு தோன்றுகிறார். ஆனால் தாமரை மருத நில பூவாயிற்றே என சந்தேகம் எழலாம். அறிமுகமாகும் பொழுது வெறும் மூக்குடன் இருப்பவர் பாடல் காட்சி ஒன்றில் இரண்டு நீல நிற மூக்கத்திகள் அணிந்துள்ளார். அது கனவுப் பாட்டல்ல. இது எதார்த்த வகைத் திரைப்படம் என்பதை நினைவில் கொள்க. மூக்குத்திகள் மறைகின்றன. பிறகு மூக்கில் ஒரு வளையம் அணிந்துள்ளார். அந்த ஒரு வளையமும் திடீரென இரண்டாகிறது. நல்லவேளை படம் முடியும் வரை நாயகிற்கு ஒரே ஒரு மூக்கு தான் உள்ளது.
காயாம்பூ வீரம் செறிந்தவர், தொல்காப்பியருக்கு பிற்காலத்தவர். சுதந்திரமானவரும் கூட. தன் நண்பர்களையும், காதலனான வலனையும், “டா..” போட்டே அழைப்பார். பாலையின் வரவைக் குறித்து அச்சமுறும் வலனுடன் கலவிக் கொண்டு அவ்வச்சத்தைப் போக்குகிறார். அவ்விடத்திற்கு விருத்திரனும், மற்றவர்களும் வந்து விடுகின்றனர். “நான் உடன்போக்க* தான் வந்தேன்” என விருத்திரனிடம் வலனை தனக்கு மணம் முடித்து வைக்க சொல்கிறார். வலனையும், காயாம்பூவையும் அருகருகில் அமர வைத்து அனைவரும் வாழ்த்து சொல்கின்றனர். எந்தச் சடங்குமின்றி அந்தக் காலத்தில் திருமணம் எவ்வளவு எளிதாக முடிந்துள்ளது என வியக்காமல் இருக்க முடியவில்லை. (உடன்போக்கு* – அக இலக்கியத் தலைவி தன் பெற்றோர் இசைவு இன்றித் தலைவனுடன் செல்லுதல்).
விஜயகாந்த் படத்தில் வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தமிழ் பேசுவது வந்தேறிகள் பேசுகின்றனர். ‘பாலை வருது’ என வசனங்களில் மட்டுமே பாலை வருகிறது. சூரியனின் வெம்மையால் முல்லை நிலப்பகுதியின் வளமை தீய்ந்து பாலையாக மாறும் காட்சிகள் படத்தில் இல்லை. தமிழர்கள் அடிக்கடி ஆடி, பாடுகின்றனர். ஆனால் அந்தப் பாட்டு முல்லைப் பண் தானா என சந்தேகமாக உள்ளது. அவர்கள் கையில் முல்லை யாழ் இல்லை ஆனால் பறை மட்டும் வைத்துள்ளார்கள். படத்தில் தமிழர்கள் என சுமார் பத்து பேரும், வந்தேறிகள் என சுமார் பதினைந்து பேரும் தான் உள்ளனர். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல 2000 ஆண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள 25 பேரே போதும் என நினைத்து விட்டனர் போலும். மற்ற நாட்டினர் ஆடை அணியாமல் விலங்குகளைக் கொன்று உண்டு காட்டுவாசிகளாக வாழ்ந்த பொழுது தமிழர்கள் மேம்பட்டவராக வாழ்ந்தனர் என ‘ஏழாம் அறிவு‘ படம் போலவே தொடங்குகிறது. எவ்வாறு மேம்பட்டவர்கள் என்றும் படம் முடியும் பொழுது வரும் ஒரு காட்சியின் மூலம் விளக்குகின்றனர்.
அத்தி என்னும் தமிழனின் காலடியில் இருக்கும் வந்தேறி ஒருவன், “என்னை விட்டுடுங்க. நான் உங்க அடிமையாக ஆயிடுறேன்” என உயிர்ப் பிச்சைக் கேட்கின்றான். அத்தி திரும்பி முதுவனைப் பார்க்கிறான்.
“நாம் யாருக்கும் அடிமை இல்லை. நமக்கும் யாரும் அடிமை இல்லை. அதனால்..”
கொல்லப்படும் வந்தேறியின் வயிற்றில் அத்தியின் தலை. நிமிரும் அத்தின் வாயில் இரத்தம். வந்தேறியின் வயிற்றிலும்.
பாலை – வறட்சி.