32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

Dinesh R சேலம் Published: 22/10/2015 2 நிமிட வாசிப்பு Updated: 08/03/2016 சினிமா
எழுத்து அளவு:

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் உள்ளார் சமந்தா. அவரை விடவும் படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வேகத்தடையாக உள்ளது.

‘என் கடமை உயிரை விட்டு நடிப்பது’ என விக்ரம், இந்தப் படத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்கிறார் விக்ரம். வயோதிகம் லேசாக முகத்தில் எட்டிப் பார்த்தாலும், ஆடல் பாடல் சண்டைக் காட்சிகளில் ஒரு குறையும் வைக்காமல் இளமை துள்ள திரையில் வலம் வருகிறார். எனினும், கதாபாத்திரத்தின் மெத்தனமான அணுகுமுறை, நாயகனை ரசிக்க விடாமல் தடுக்கிறது. ‘எத்தனை பேர் வந்தாலும் அடிப்பேன்’ என்பது போன்ற மதமதப்பான உடல்மொழிக்குப் போதிய தீனி இல்லாததும் ஒரு குறை. சமந்தாக்கு காதல் வரும் காரணமும் மிகத் திராபையாக உள்ளது. மேலும், சமந்தா ஓர் அநாதையும்கூட. அதாவது, பாவம் ஷகீலாக்கு யாருமே இல்லை தெரியுமா?

வழக்கம் போல், பசுபதி ஈர்க்கிறார். தாஸாக அவர் அறிமுகமாகி, விக்ரமைப் பிடிக்க முடியாமல், விக்ரமின் திறமையை மெச்சி அவரையே வேலைக்கு வைப்பதெனக் கலகலக்க வைக்கிறார். பூரான் சிங்காக அபிமன்யுவும், உயர்சாதி தக்ஷா பாயாக ராகுல் தேவும் வில்லன்களாக நடித்துள்ளனர்.

சமந்தாவைக் காப்பாற்றணும். ‘அப்படியே ஓடிடலாம்’ என்கிறார் விக்ரமிடம். ‘இல்ல, முடிச்சு வச்சுட்டுப் போலாம்’ என கீழ் சாதியினருக்கும், மேல் சாதியினருக்கும் சண்டையை உருவாக்குகிறார். பத்து எண்றதுக்குள் ஒரு கலவரத்தை உருவாக்கும் அவருக்கு, ஏதோ ஹீரோயிஸம் பண்ணிட்டோங்கிற மாதிரி ஒரு திருப்தி முகத்தில்.

ஆறு மாதம் பிளான் போட்டு, கடவுளாக வணங்கப்படும் ஒரு மூதாட்டியை பலி கொடுத்து, சந்தர்ப்பத்தை நழுவ விட்டுக்கூடாதெனக் காத்திருக்கும் தக்ஷா பாய், “என்னை 10 எண்ணிட்டுக் கொல்லுங்க” என சமந்தா லூசுத்தனமாய் இளிப்பதற்கு அடிபணிகிறார். படத்தில் தானாக உருவாகும் சீரியஸ்னஸையும் வலுகட்டாயமாக மழுங்கடித்துள்ளனர். கோலி சோடாவைப் பார்த்துப் பார்த்துக் கச்சிதமாகச் செதுக்கிய விஜய் மில்டன், இம்முறை பெரிய பிம்பங்களான விக்ரம் – சமந்தா எனும் மாயையில் சிக்கி, திரைக்கதையைப் போதியளவு சுவாரசியப்படுத்தத் தவறியுள்ளார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.