
தொடர் கொலைகளும், கொலைகள் சார்ந்த விசாரணையும் தான் இப்படத்தின் கரு.
இரு கொலைகளைக் காவல்துறை விசாரிக்கிறது. கட் செய்தால், அசோக் போலீஸிடம் ஒரு கதை சொல்கிறார்.
ஒரு ஹிந்திக்காரர் வீட்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலைக்குச் சேரும் ஹீரோ அசோக் அந்த வீட்டுப்பெண்ணை காதலிக்கிறார். அதன்பின் வீட்டுக்கு விசயம் தெரிந்து பிரச்சனை வருகிறது. அந்தப்பெண் அசோக்கை விட்டு விலகுகிறார். அதனால் அசோக் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுகிறார். மேலும் ஒரு ரெளடியையும் கொன்று விடுகிறார். அக்கொலைகளை, ‘நான் தான் செய்தேன்’ என போலீஸிடமும் சொல்கிறார். ‘ஓகே! பிரச்சனை முடிந்தது’ என நினைக்கும் போது கதை வேறோரு பரிணாமம் எடுக்கிறது. உண்மையில் கொலைகளை நாயகன்தான் செய்தாரா என்ற புள்ளியில் கதை நகர்கிறது.
நாயகன் அசோக் இயல்பாக நடித்துள்ளார். அடப்பாவி அசோக் என்ற காட்சிகளிலும், அப்பாவி அசோக் என்ற காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். சற்று செயற்கைத்தனம் தெரிந்தாலும் போலீஸாக நடித்துள்ள திருமாறன் மோகன் தாஸ் ஓரளவு ஓகே மார்க் வாங்குகிறார். நீதிபதியாக வரும் ஒய்.ஜி மகேந்திரன் வழக்கம் போல் நடித்துத் தள்ளியுள்ளார். அர்ஜுனா துரைசாமி, நிஷா அஸ்மத் உள்ளிட்ட இன்னபிற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.
ஷேக் காதர் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கவில்லை. பின்னணி இசையில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் வெங்கடாச்சலம் சிங்காரவேலன் சிக்கனமானகவே ஷாட்ஸை எடுத்துள்ளார். இன்னும் சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்திருந்தால் காட்சிகளின் கணம் கூடியிருக்கும்.
சற்று வித்தியாசமான கதையைக் கையிலெடுத்த இயக்குநர் நெடுமாறன் மோகன் தாஸ், எந்த இயல்புமில்லாத திரைக்கதையைக் கொடுத்துள்ளார். யாராவது, ‘நீதான் இதைத் செஞ்ச’ என்று செய்யாத ஒன்றைச் சொன்னாலும், அப்படியே தானே செய்ததாக கற்பனை செய்துகொள்கிறார் நாயகன். ஆக்ஷுவலா இந்த ஐடியா கொஞ்சம் புதுசு தான். அதை இன்டலிஜென்டாகச் சொல்லியிருந்தால் கிட்டி கெட்டியாக இருந்திருக்கும்.
– வெண்பா தமிழ்
