

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா, ”படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன எனத் தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
கடல் அலையின் ஓசையைக் கேட்டிருப்பீர்கள். கடல், ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா? அதனை இந்தப் படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையைச் சொல்லி இருக்கிறார்” என்றார்.
சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி, ”சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரிக் காலங்களில் பார்த்து ரசித்துக் கொண்டாடி இருக்கிறேன். அவரை மீண்டும் இந்தப் படத்திற்காகத் திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதைப் பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரைப் பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியைச் செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.
நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகிப் பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரைக் கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.
அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையைக் கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இந்தக் காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா, வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்” என்றார்.


