
ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஃபஹத் ஃபாசில் பணத்திற்காக எதையும் செய்யும் பேர்வழி. அவர் ஒரு கிடாய் மோதல் போட்டியில் சீட்டிங் செய்து ஜெயிக்கிறார். அதைக் கண்டு கொண்ட எதிரணி இவருக்குப் பெரிய கெடு விதிக்கிறது. இல்லையென்றால் அவர் உயிர் பறிப் போய்விடும். கெடுதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் 25 லட்சம் வேண்டும். அதனால் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியான சாரா பாலேகரைக் கடத்துகிறார். சாரா பாலேகர் ஒரு வித்தியாசமான சிறுமி. அவரது உருவம் ஃபஹத் ஃபாசில் தவிர யாருக்கும் தெரியாது. அவரை வைத்துக் கொண்டு ஃபஹத் படும் அவஸ்தைகள், பெறும் பலன்கள் என்னென்ன என்பது தான் படத்தின் கதை.
ஃபஹத் ஃபாசில் ஈசியாக இடது கையில் டீல் செய்யும் கதாபாத்திரம் என்பதால் அசால்டாக நடித்துள்ளார். கடைசிக் காட்சியில் மனதை உருக்கி விடுகிறார். சிறுமி சாரா பாலேகர் ஆகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். படத்தின் இறுதிக் காட்சியில் பார்வையாளர்களின் கண்களை நனைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார். மகேஷ் மஞ்சுரேகர், செளரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, சுப்புராஜு, திவ்யா பிள்ளை, எஸ்.எஸ் ஷஷாங்க் உள்ளிட்ட இன்னபிற நடிகர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கால பைரவாவின் இசை படத்தில் நன்றாக உள்ளது. ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ் சிறப்பான விஷுவல்ஸைக் கொடுத்துள்ளார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவு தரமாக உள்ளது.
படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் இருவருக்குமுள்ள எமோஷ்னல் பாண்டிங் தான் அதி முக்கியம். ஏனோ க்ளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே அது வொர்க் ஆகவில்லை. ரைட்டிங் லெவலில் இரு கேரக்டர்களுக்கும் ஆழம் சேர்த்திருக்க வேண்டும். மேலும் நகைச்சுவைக் காட்சிகளைப் படம் கேட்டும் இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி கண்டுகொள்ள வில்லை. கடைசி நேர எமோஷ்னல் விறுவிறுப்பைப் படம் நெடுகக் கொடுத்திருந்தால் திரைக்கதையில் இவ்வளவு டிரபிள் இருந்திருக்காது.
– வெண்பா தமிழ்
