32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“எழுத்தாளர்களைத் தமிழ் சினிமா மதிக்கவேண்டும்” – இயக்குநர் தமிழ்

Dinesh R சேலம் Published: 14/03/2026 3 நிமிட வாசிப்பு Updated: 16/03/2026 சினிமா
எழுத்து அளவு:

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்தது. இந்நிலையில், படம் வெளியாகி 75 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்து வருகிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் கொண்டாடப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற “சிறை” திரைப்பட வெற்றிவிழாவில், படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் தமிழ், “இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.

இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படம் இப்போது வெளியானபோது, அது எனக்குப் புதிய உணர்வைத் தந்தது. இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாகத் தோன்றுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லாச் சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.

எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.