

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்கநர் திரு. அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “அமரம்” ஆகும். மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திரு. அருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 28 இல் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இந்தப் படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாளர் C.R.ராஜன், “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் என்னிடம் கூறியவுடனேயே இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். கதாநாயகன் தேஜஸ் ராஜன் மற்றும் கதாநாயகி ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.
நாயகன் தேஜஸ் ராஜன், “இந்தத் திரைப்படத்தை நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்புச் செய்தோம். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணிக்கும், எண்ணூர் பீச்சிலும் என பல்வேறு இடங்களில் பல கஷ்டங்களுக்கிடையே இந்தப் படத்தை படமாக்கினோம். இந்தப் படத்திற்காக 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். இயக்குநர் அருள் கிருஷ்ணன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்” என்றார்.
படத்தின் இயக்குநர் அருள் கிருஷ்ணன், “என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம். அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே!’ என்று கூறினார்.
கதாநாயகர்களை என்னால போய் ரீச் பண்ண முடியல, காரணம் அவங்களுக்கு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு. அப்போ நடிகர் கார்த்தி சார் ஒரு இன்டர்வியூல சொன்ன மாதிரி, அதை ஒரு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கிட்டு நாம் முதல்ல வெளி வரணும். அவங்கள மாதிரி ஒரு நடிகருக்கு எழுதுன கதையிலயும், நல்ல கதையா, நல்ல திரைக்கதையா இருக்குற பட்சத்துல, ஒரு புதுமுக நடிகரைக் கூடப் போட்டு அந்த அளவுக்கு ஒரு ஹிட்ட கொடுக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு படத்த எடுத்துற முடியும். ஒரு குறைந்த முதலீட்டுலயே, குறைந்த பட்ஜெட்லயே ஒரு பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும்னா அதுக்கான ஒரு பெரிய முயற்சிக்கு ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம், அதுக்கு நெறைய திட்டமிடல் தான் காரணம்.
ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் இந்தப் படத்த பத்தி சொல்லும்போது, ஒரு ‘புதிய பாதை’, ஒரு ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு ‘பருத்திவீரன்’ மாதிரி வரும்னு சொன்னாரு. கல்ட் கிளாசிக்கா (Cult classic) இந்தப் படம் வரும்.
இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது.
இந்தியச் சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரைப் படத்திற்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது. நடிகர் யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பர். ‘ஜுங்கா’ படத்திலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தபோது, அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. சினிமா சூழல் அப்படித்தான் இருக்கிறது. இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக இருக்கும்” என்றார்.
மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர் படத்தொகுப்புப் பணிகளைச் செய்துள்ளார்.
தொழில்நுட்பக் குழு:-
எழுத்து இயக்கம் – அருள் கிருஷ்ணன்
இசை – மிக்கி ஜெ .மேயர்
பாடல்கள் – சினேகன்,சௌந்தரராஜன். K
ஒளிப்பதிவு – பரத் குமார்
படத்தொகுப்பு – R. ஸ்ரீராமர்
கலை – ஜனார்த்தனன்
சண்டை – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – C.R.ராஜன்.


