32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தியா விமர்சனம்

Dinesh R சேலம் Published: 27/04/2018 2 நிமிட வாசிப்பு Updated: 18/06/2018 சினிமா
எழுத்து அளவு:

Diya movie review

‘கரு’ உருமாறி ‘லைக்காவின் கரு’வாகி, தியாவாக ஜனித்துள்ளாள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பக்தொன்பது வயதான துளசி கர்ப்பமடைந்து விடுகிறாள். துளசியின் வீட்டினரும், அவளது காதலனான கிருஷ்ணாவின் வீட்டினரும், சிறு சச்சரவிற்குப் பின், இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு, துளிசியின் கருவைக் கலைக்கச் சொல்கின்றனர். 24 வயதில் இருவருக்கும் சொன்னபடி திருமணமும் செய்து வைக்கின்றனர். அதன் பின் அவர்கள் வீட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. எதனால் ஏன் என்பது தான் படத்தின் கதை.

‘ப்ரேமம்’ படப் புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் முதற்படமிது. கண்களால் புன்னகைக்கவோ, துள்ளலாய் நடனமாடவோ வாய்ப்பில்லாத ஒரு பாத்திரத்தில் வருகிறார் சாய் பல்லவி. ஆனால், மென் சோகத்தோடு வளைய வரும் அவர் தான் படத்தின் பிரதான குவிமையம். அதனைக் கச்சிதமாக உள்வாங்கிப் படத்திற்கு உயிரினை அளித்துள்ளார் துளசியாக வரும் சாய் பல்லவி.

கதாநாயகியின் பாத்திரம் பிரதானமாய் இருக்கும் படங்களில் நாயகனுக்கு என்ன வேலையோ, அவ்வளவே இப்படத்தில் நாக ஷவ்ரியாவிற்கும். ஒரு பணக்கார வீட்டுப் பையனின் தோரணை இயல்பாகவே பொருந்துவதால் கதாபாத்திற்கு இலகுவாய் அதிக சிரமமின்றி நியாயம் செய்துள்ளார்.

நாயகனின் தந்தை சங்கர் ராமாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தன் மகனுக்கு என்னென்ன தேவையெனப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். சாய் பல்லவியின் அம்மா கற்பகமாக நடித்திருக்கிறர் ரேகா. மிகச் சீரியசான படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட காமெடி போலிசாக ஆர் ஜே பாலாஜி காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர் விஜய். அவரது பாத்திரம் திடீரென சீரியசாவது தான் உண்மையிலேயே படத்தில் நல்ல காமெடி.

இயக்குநர் விஜயின் படம் என்றாலே தப்பாமல் இருக்கும் நடிகரான நாசர் இப்படத்தில் இல்லை. அதே போல், விஜயின் படங்களில் கவனிக்கத்தக்க வேடத்தில் வரும் T.M.கார்த்திக் படத்தில் இருந்தும் டம்மியாக்கப்பட்டுள்ளார். ‘சர்வம் சாய் பல்லவி மயம்’ என முடிவெடுத்து மற்ற பாத்திரங்களுக்கு சரியான முக்கியத்துவம் தராமல் விட்டது படத்தின் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.

‘லட்டு’ எனக் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சத் தோன்றும் கொள்ளையழகு தியாவாக பேபி வெரோனிகா நடித்துள்ளார். சாய் பல்லவியின் பின்னாலேயே நடப்பது, அவர் செய்வதையே செய்யும் அழகான காப்பி-கேட் க்யூட்டி கதாபாத்திரத்தில் மனதைக் கொள்ளை கொள்கிறார் வெரோனிகா. ஆனால், பேபி சாராவை வைத்து தெய்வ திருமகளில் செய்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தத் தவறியுள்ளார் இயக்குநர் விஜய். மிக அழகான க்ளைமேக்ஸ் எனினும், ஒரு குழந்தையின் நிறைவேறா ஏக்கம் தீரும் தருணத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறிவிடுகிறது படம்.

அந்த மேஜிக்கை, ‘ஆலாலிலோ’ பாடலில் சாம் C.S. கொண்டு வந்துள்ளார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் சாய் பல்லவி, பேபி வெரோனிகா மட்டுமன்று மூன்றே காட்சிகளில் வரும் சந்தான பாரதி கூட அழகாய் மிளிர்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.