32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நித்தம் ஒரு வானம் – பனித் தூறலாய்ச் செவிசாய்த்த பிரபஞ்சம்

Dinesh R சேலம் Published: 31/10/2022 3 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகை ரிது வர்மா, ”இந்தப் படத்தில் இயக்குநர் ரா. கார்த்திக் எழுதிய சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய கற்பனையில் உதித்த அந்தக் கதாபாத்திரத்தை நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறேன் என நம்புகிறேன். இந்தப் படத்தில் என்னுடன் நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகை ஷிவாத்மிகா ராஜசேகரும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் ஒரு பிறவி நடிகை என்பதால் இயற்கையாகவே நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். இளமையும் புதுமையும் தான் இந்தப் படத்தின் ரசிகர்களைக் கவரக்கூடிய அம்சம். இந்தப் படத்தைத் திரையரங்கத்திற்கு வருகைத் தந்து பாருங்கள். இந்த படைப்பு உங்களை ஏமாற்றாது” என்றார்.

நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர், ”இந்தப் படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகையாக சிறந்த கதையும், கதாபாத்திரமும் கிடைக்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போம். இந்த எதிர்பார்ப்பு மீனாட்சி கதாபாத்திரம் மூலம் சாத்தியமானது. இதற்காக இயக்குநருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிகைகள் ரிதுவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாது. மிக அரிதாகத்தான் இது போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நவம்பர் நான்காம் தேதியன்று ‘நித்தம் ஒரு வானம்’ திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு உணர்வுபூர்வமான, அழகான, இளமையான வாழ்க்கைக்கு தேவையான கதை” என்றார்.

நடிகர் அசோக் செல்வன், ”நித்தம் ஒரு வானம் என்னுடைய திரையுலகப் பயணத்தில் ஸ்பெஷலான திரைப்படம். இது ஒரு மோட்டிவேஷனல் கதை. இந்தப் படத்தில் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. ‘ஓ மை கடவுளே’ படம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல், அதைவிடக் கூடுதலாக இந்தப் படம் ஏற்படுத்தும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் பட குழுவினருக்கும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் பனி படர்ந்திருக்கும். இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு, படக்குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்தது. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரின் முகத்திலும் கவலை ஏற்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்டு இவ்வளவு தொலைவு வந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம். கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10 – 15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பனி பொழியத் தொடங்கியது. நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து கொள்கிறோம். உணர்வு மேலிட, இயக்குநரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழியத் தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது’ என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்தப் பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.