32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ONE MAN – ஒரு வரலாற்றுப் பதிவு | ARK ராஜராஜா

Dinesh R சேலம் Published: 18/08/2026 4 நிமிட வாசிப்பு Updated: 22/08/2026 சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் சங்ககிரி ராச்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சங்ககிரி ராச்குமார், “இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ள படைப்பைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வழிகாட்டலையும் ஆலோசனையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் உடனடியாக பிவிஆர் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு பேசினார்.

பிவிஆர் நிறுவனத்திடம், ‘இந்தப் படைப்பு ரசிகர்களைச் சென்றடைய வேண்டும்’ என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்கள், ‘உலகில் யாரும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. தமிழ்நாட்டில் தமிழராகிய நீங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எங்களின் ஆதரவு உண்டு’ என்றனர். இதற்காகப் பிவிஆர் நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக முயற்சி செய்தால், ‘இப்படி ஒரு அரிய முயற்சியா!’ என்ற வியப்புடன் ஆதரவு அளிப்பார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவைச் சந்தித்தேன். அவர் என்னுடைய நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய ஸ்டுடியோவின் சாவியை ஒப்படைத்துவிட்டு, ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இங்கு பணியாற்றலாம்’ என்று தெரிவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா, “ஒரு மனிதன் எல்லா வேலைகளையும் செய்து, அவரே எல்லாக் கதாபாத்திரங்களிலும் நடித்து, ஒரு படத்தை உருவாக்குகிறார் என்று சொல்லும்போது, மற்றவர்களைப் போல எனக்குள்ளும் ஒரு கேள்விக்குறி இருந்தது.

ஆனால், அவர் பணியாற்றிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முன்பு குறிப்பிட்டதைப் போல், இதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னார் அல்லவா? அதில் நானும் ஓர் ஆதாரம் தான். படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் அனைத்தையும் அவரே மேற்கொண்டார். அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு திரைப்படத்தைத் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு சிறந்த தரத்துடன் உருவாக்க வேண்டுமோ, அப்படியே அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். இதுவே அவருடைய முதல் வெற்றி.

இந்தத் திரைப்படத்தை நான், இயக்குநர் லெனின் பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் பார்த்தோம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் சுமார் பத்து நிமிடங்கள் எங்களால் பேசவே முடியவில்லை. இது இந்தியத் திறமையின் உச்சம் என்று சொல்லலாம். அவருடைய உழைப்பு பெருமைப்படக்கூடியது. இது ஒரு வரலாற்றுப் பதிவு” என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி, “தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இதற்கு முன்பு ஏராளமான பிரம்மாண்டமான படங்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மைல்கல்லை எட்டிய திரைப்படம் இது. உயர்ந்த தொழில்நுட்பத் தரத்துடன் நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இடம்பெற்றிருக்கும். தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு, பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு, மிகப்பெரிய பொருளாதாரப் பங்களிப்பு என பல்வேறு அம்சங்கள் இருக்கும்.

ஆனால், இத்தகைய பெரிய பின்னணி எதுவும் இல்லாமல், தனி மனிதராக மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு சங்ககிரி ராச்குமார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் காரணமாகவே அவருடன் தொடர்ந்து பயணிக்கிறேன்.

இது சினிமாவைக் காட்டுத்தனமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும். சினிமாவை மட்டுமல்லாமல், சினிமா மூலமாக ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட கலைஞர் சங்ககிரி ராச்குமார். அதற்காகவும் நான் அவருடன் இணைந்திருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒரு நபரால் இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்படும். சினிமாவை நேசிக்கும் அனைத்துக் கலைஞர்களும் இந்தத் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

தோழர் ராச்குமார் மிக நுட்பமான நடிகர். தெருக்கூத்துக் கலைஞரும் கூட. அவருடைய தெருக்கூத்தை நான் பார்த்திருக்கிறேன். தமிழ்த் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் இவர்.

இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து சங்ககிரி ராச்குமார் திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.