32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya

Dinesh R சேலம் Published: 19/08/2026 6 நிமிட வாசிப்பு Updated: 20/08/2026 சினிமா
எழுத்து அளவு:

சித்தாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் ‘சூர்யா’ நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்தப் படக்குழுவினர், நன்றி நவில்தல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ”சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் ‘கஜினி’ படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ‘ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்’ என்று சொன்ன அந்தப் பண்பு, என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்குக் காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவைத் திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.

படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காணத் திரையரங்கத்திற்குச் சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் ‘சூர்யா’ போன்ற மாபெரும் நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை பவானி ஸ்ரீ, ”சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தவுடன் இயல்பாகப் பேசி, ‘மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்’ என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது.

இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமீதா பைஜுவும் என இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாது” என்றார்.

ராதிகா சரத்குமார், “இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால் ரசிகர்களை அன்பாலும் பாசத்தாலும், ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாகக் கதையைச் சொல்லி, அதில் ஒரு வெற்றியைப் பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதைக் கேட்கும் போதும், பேசும் போதும், பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாகச் சொல்லும் போது அவரிடம், ‘இந்தக் காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?’ எனக் கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.

இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி, அடுத்த உறவுகளை நோக்கிய அவரது பயணம் என இந்த எழுத்துக்காக வெங்கியை மனதார பாராட்டுகிறேன்.

சினிமாவில் ஒவ்வொரு கதைக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்தக் குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது ‘சூரியவம்சம்’. அது அந்தக் காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாகப் பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாகப் பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன்” என்றார்.

மமீதா பைஜு, ”இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்குச் சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ் குமார், ”வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’ படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்திருக்கிறோம். இதற்காக அவருக்கு நன்றி.

‘வாத்தி’ திரைப்படத்தின் பாடல், தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்குத் திரையுலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம்.

தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னைச் சந்தித்த அனைவரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசை பிரமாதம் எனப் பாராட்டினர். அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன்.

இந்த்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது.

சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, ”மமீதா பைஜு தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன்.

நான் ‘தி ஒன்’ சூர்யாவிடம் கதையைச் சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல், இந்தக் குடும்பக் கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது.

இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்குச் சிலிர்த்தது. சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.