Shadow

தி தியரி ஆஃப் எவரிதிங்

The Theory of Everything Tamil review

The THEORY of EVERYTHING

ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.

பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க நோயால் (Motor neuron disease) பாதிக்கப்படுகிறார். அவர் அதிகபட்சம் இரண்டு வருடம்தான் வாழ்வாரென மருத்துவர் கெடு விதிக்கிறார். அச்சூழ்நிலையில் ஜேன், ஹாக்கிங்கின் பெற்றோர்களைச் சந்தித்து ஹாக்கிங்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறுகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர்தான் படத்தின் உண்மையான கதை தொடங்குகிறது. அத்தம்பதிக்குள் நிலவும் காதல், ஸ்டீஃபனின் மோசமாக உடல்நிலை, அதை மீறி அவர் சாதிக்க ஜேன் தோல் கொடுப்பதென படம் மிக அழகானதொரு படமாக நிறைவைத் தருகிறது.

படம் சிக்கலான அறிவியல் கோட்பாடுகளைப் பற்றியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் மேதைமையைப் பற்றியோ பேசவில்லை. இது ஜேன் வைல்ட் ஹாக்கிங்ஸ் எனும் அற்புதமான பெண்ணின் அகத்தைப் பிரதிபலிக்கும் படம். அவரது பார்வையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் பற்றியும், அவருடனான வாழ்க்கை பற்றியும் அலசுகிறது. தன் தசைகளின் கட்டுப்பாடினை மெல்ல மெல்ல இழந்து, இரண்டு வருடங்களுக்குள் இறந்தே விடுவான் என்ற நிலைமையில் இருக்கும் இளைஞனை மனம் புரிய முடிவெடுக்க 21 வயது பெண்ணுக்கு எப்படிச் சாத்தியமானது?

காதல்.

Jane Wilde Hawkings

பிரபஞ்சத்தின் தோற்றம் எப்படி நிகழ்ந்தது என அறிய விரும்பும் துடிப்பான இளைஞனுக்கு எல்லாமுமாக இருக்கிறாள் ஜேன்.

ஃபெலிசிட்டி ஜோன்ஸ்ஜேன் வைல்ட் ஹாக்கிங்காக நடித்திருக்கும் ஃபெலிசிட்டி ஜோன்ஸ் மிக அபாரமான தேர்வு. தன் கனவுகளை பலி கொடுத்து ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிக்கு சகல விதத்திலும் உதவுகிறாள் ஜேன். அதனால் ஜேனுக்கு ஏற்படும் அழுத்தத்தையும் அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் ஜோன்ஸ். இது கதாநாயகியை மையப்படுத்தும் படம்தான் எனினும், படத்தின் மைய ஈர்ப்பு என்பது ‘இது ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றிய படம்’ என்பதே! அதற்கு தீனி போடும் விதமாக ஸ்டீஃபன் ஹாக்கிங்காவே உருமாறியுள்ளார் எடி ரெட்மெய்ன். ஆறு மாதங்கள் ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் வாழ்வையும் அவரது பேட்டியையும் முழுவதும் பார்த்துத் தயாராகி நடித்துள்ளார் எடி ரெட்மெய்ன். ‘நகர முடியாததின் வலியை இன்னும் அவர் கண்களில் காண்கிறேன்’ என ஸ்டீஃபன் ஹாக்கிங்கைச் சந்தித்திவிட்டுச் சொன்ன எடி ரெட்மெய்னை, நீங்கள் திரையில் எந்த ஃப்ரேமிலுமே பார்க்க இயலாது. ஸ்டீஃபன் ஹாக்கிங்கையே உணர்வீர்கள். நரம்பியல் நோய் ஸ்டீஃபனை மெல்ல மெல்ல ஆக்கிரமித்ததைத் துல்லியமாகப் பிரதிபலித்துள்ளார்.

மனிதனை நோயென்னச் செய்துவிட முடியும்? ஸ்டீஃபன் ஹாக்கிங் நிமோனியாவால் தாக்குண்டு, தொண்டைக் குழாய் அறுவைச் சிகிச்சை (trachestomy) செய்து கொள்ள நேர்கிறது. அதனால் அவர் பேசும் திறனை முற்றிலும் இழக்கும்போது, speech synthesizer-ஐ (பேச்சுச் சேர்ப்பான்), அவரது சக்கர நாற்காலியில் பொருத்தி உலகுடனான அவரது தொடர்பைத் தக்க வைத்துக் கொள்கிறார். விஞ்ஞானம்தான் எவ்வளவு அற்புதமான விஷயம்?

‘குரலை இழப்பதற்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது மேலும் சிறந்த முறையில் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது என்பதே உண்மை’ எனச் சொல்லியுள்ளார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த எண்ணத்தை அப்படியே முகபாவனைகளால் உணர்த்துகிறார் எடி ரெட்மெய்ன். இந்த ஸ்பீச் சின்த்தசைஸர், அவரது வாழ்வையே மாற்றும் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. அதை எடி முகத்தில் நீங்கள் திரையில் காணலாம். அவரது வாட்டமான முகம் ஸ்பீச் சின்த்தசைஸர் பொருத்தப்பட்ட பின் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. அந்த மகிழ்ச்சி உரையாட முடிகிறது என்பதால் அல்ல, எழுதிக் கொண்டிருக்கும் நூலை தடங்கலின்றி முடிக்கலாம் என்ற ஆத்ம திருப்தியால் உண்டானது. அவர் அதன் பின் நகைச்சுவையாகப் பேசி, மேலும் உற்சாகமானவராக மாறுகிறார். ‘காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief Historyof Time)’ என்ற அவரது கொடை அதனாலேயே நமக்குக் கிடைத்துள்ளது.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் ஜோனாதன் ஜோன்ஸ். ஜோனாதனை மிகவும் பாந்தமான மனிதராக திரையில் கொண்டு வந்துள்ளார் சார்லி காக்ஸ். அவரை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். அப்படித்தான் ஜோன்ஸ்க்கும் பிடித்து விடுகிறது. இருவருக்கும் இடையே நிலவுவது ஒரு பரிதவிப்பான குழப்பமான காதல். முப்பது வருடம் ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்து விட்டு, ஜோனாதனை மனம் செய்து கொள்கிறார் ஜேன்.

ஸ்பீச் சின்த்தசைஸர் பொருத்தப்பட்ட வரும் குரலுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங்கே பின்னணிக் குரல் கொடுத்துள்ளார் என்பது படத்தின் சிறப்பம்சம். படத்தினைப் பார்த்து முடித்ததும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கண்ணீரை நர்ஸ் ஒருவர் துடைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவர் வாழும் காலத்திலேயே அவரைக் கெளரவிக்க இயலுகிறது ஆங்கிலேயரால். ம்ம்.. ஏனோ ஞான ராஜசேகரனின் ராமானுஜன் படம் ஞாபகம் வருகிறது.

இப்படம் எவ்வகையிலும் முழுமையான படமில்லை. ஆனால்..

வாழ்வின் மீதான நம்பிக்கையையும், மனதிற்கொரு நிறைவினையும் அளித்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் மார்ஷ்.