Search

உழுத வயலின் சேறு வாசனை

Pongal 2015

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது.

“அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாகக் கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் ” என்கிறார் கவிஞர் யுகபாரதி.

வாசனை

ஈச்சம்பழத்து ஈர வாசனை
இஞ்சி முரபா கார வாசனை
எலந்தபழத்து புளிப்பு வாசனை
பலா இனிப்பு வாசனை

கரிச காட்டு மண்ணு வாசனை
காத்திரு அடிச்ச நெல்லு வாசனை
கொழம்பு வெச்ச மீனு வாசனை
எரியும் மெழுகு வாசனை

பூமியில் எத்தனை வாசனை வாசனை
வகுத்து வெச்சவன் யாரு
நாசியில் நுழையும் வாசனை வாசனை
ஊரு பேரை சொல்லும் பாரு

வெள்ளையடிச்ச வீட்டு வாசனை
மெழுகி முடிச்ச திண்ண வாசனை
குமரி பெண்ணின் கூந்தல் வாசனை
குளிச்ச சோப்பு வாசனை

மஞ்சள் அரைச்ச கல்லு வாசனை
நனைஞ்சி போன வைக்கோல் வாசனை
உழுத வயலின் சேறு வாசனை
கரும்பு சாறு வாசனை

பெற்ற தாயின் புடவை வாசனை
பிள்ள உதட்டின் பாலு வாசனை
இஸ்த்ரி போட்ட சட்ட வாசனை
புது புத்தக வாசனை

கொழுந்து வெத்தல காம்பு வாசனை
கொதிக்கும்போது சோம்பு வாசனை
காத்தில் கரைஞ்ச சூட வாசனை
கொல்லைத் துளசி வாசனை.