32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Tourist family | 16 வயது பையன்க்கு அப்பாவாகச் சசிகுமார்

Dinesh R சேலம் Published: 27/04/2025 5 நிமிட வாசிப்பு Updated: 29/04/2025 சினிமா
எழுத்து அளவு:

சசிகுமார், சிம்ரன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் மோகன் ராஜன், ” ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து..’ எனும் பாடலை நாங்கள் எந்தப் படத்திற்காக எழுதினோமோ, அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, ‘ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்து விட்டது’ என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு, ‘அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது’ என வாழ்த்தினார். அந்த வாழ்த்தை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னைச் சந்தித்து, ‘நான் படத்தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி’ தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த ‘குட்நைட்’ படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்குப் பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தப் படத்தின் பாடல்களை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலைப் பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்தப் பாடலுக்கு நான் மிகப் பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் ‘1947’ எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். ‘குட்நைட்’ படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான், ”குட்நைட், லவ்வர் ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறோம். இந்தப் படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன். சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர், நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னைச் சந்தித்து கதையைச் சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழுக் கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையைக் கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ, அதை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தைப் பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், ”இயக்குநர் அபிஷன் கதையைச் சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்தப் படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்தப் படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ, அதே போல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்குப் பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன். சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையைப் புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.

மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன். அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன், ஷான் ரோல்டன், பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையைத் தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்தக் கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும், என்ன மாயஜாலம் செய்யும் என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்டக் கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும். ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழுப் பக்கபலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிக்கரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அன்பைக் கொடுக்கும். ரசிகர்களைக் கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.