

இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.
இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது பாகமான இப்படம், 2023 இல் வெளிவந்த தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சி என்றாலும், தனிப்படமாகப் பாவிக்கும்படியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆவி வாழும் இடத்திற்கு ‘தி ஃபர்தர்’ எனப் பெயர். அமானுஷ்யமான ஒரு சிவப்புக் கதவினைத் திறந்தால், பூமியில் இருந்து ‘தி ஃபர்தர்’க்குச் சென்றுவிட முடியும். முந்தைய பாகத்து நாயகனுக்கு அத்தகைய சிவப்புக் கதவினாலே பிரச்சனைகள் எழும். ஃபர்தரில் சிக்கிக் கொள்ளும் தனது மகனைக் காப்பாற்றுவதற்காக நாயகன் பேட்ரிக் வில்ஸன் அரும்பாடுபடுவார். காப்பாற்றியதும் அந்தக் கதவை நிரந்திரமாக அடைப்பார்கள்.
ஒரு கதவு மூடினால் இன்னொரு சிவப்புக் கதவு திறக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் தொடக்கம். பல் மருத்துவரான கெம்மா ஹாலிற்குத் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருகின்றன. ஆனால், அது கனவுகள் இல்லை, உண்மையிலேயே அவர் ஃபர்தருக்குள் சென்று வருகிறார் என்பது தெரியவரும். மேலும் அவர், பூமியில் இருந்து ஃபர்தருக்கோ, ஃபர்தரில் இருந்து பூமிக்கோ, எந்தப் பொருளையும் கொண்டு செல்லும் சக்தி பெற்றவராக இருப்பார். இதை அறிந்து கொள்ளும் சைரஸ் எனும் தீய ஆவி, கெம்மாவின் மூலமாக பூமிக்கு நிரந்தரமாகத் தனது பின்பற்றிகளிடம் வருவதற்கு முயற்சி செய்யும். சைரஸின் முயற்சியால் பீடிக்கப்படும், அதை எப்படி முறியடித்துத் தன்னையும், தன் மகள் மாயாவையும் காப்பாற்றிக் கொள்கிறார் என்பதுதான் படத்தின் முடிவு.
ஃபர்தரில் உள்ள உதவும் ஆத்மா எலைஸ் ரெய்னராக, இப்படத்திலும் தொடர்கிறார் லின் ஷயே. ‘அதைத் தான் நான் செய்கிறேன்’ என்ற வசனத்தை, ஒரு ஹாரர் படத்தில் பன்ச் டயலாகச் சொல்லிக் கலக்குகிறார். மாயா ஹாலாக நடித்துள்ள சிறுமி ஐலேண்ட் ஆஸ்டின் மிகச் சிறப்பான தேர்வு. கெம்மா ஹாலாக, அமெலியா ஈவ் அற்புதமாக நடித்துள்ளார். கெம்மா ஹாலாக தனது அம்மா மீதான அச்சமான பால்யத்தின் சோகத்தைச் சுமப்பது, தன் மகளுக்கு அத்தகைய பயம் வரக்கூடாதென மெனக்கெப்படுது, கெட்ட கனவுகளால் பீடிக்கப்படுவது, மகளுக்கு ஓர் ஆபத்து என்றதும் தைரியத்தை வெளிப்படுத்துவது எனப் படத்தின் முதுகெலும்பாக அசத்தியுள்ளார்.
‘தி ரெட் டோர்’ படத்தில் ஹாரர் அம்சத்தை விட எமோஷ்னல் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தப் பாகத்தில், ஹாரர் அம்சத்தையும், எமோஷ்னல் காட்சிகளையும் சரி சமமாகக் கலந்து முழு நிறைவினை அளித்துள்ளார் இயக்குநர் ஜேக்கப் சேஸ்.


