32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 09/07/2023 2 நிமிட வாசிப்பு Updated: 25/08/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. ஐந்தாவது பாகமான இப்படம், 2011 இலும், 2013 இலும் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தொடர்ச்சியாகும். டால்டன் லாம்பேர்ட் எனும் சிறுவனுக்கு இயற்கையாகவே தன் ஸ்தூல உடலில் (Physical body) இருந்து சூட்சும உடலைப் (Astral body) பிரித்து, சூட்சுமப் பயணம் (Astral projection) வல்லமை இருக்கும். அப்படி அவன் தனது 10 ஆவது வயதில் சூட்சுமப் பயணம் மேற்கொள்ளும் பொழுது, சிவப்புக் கதவின் பின்னாலிருக்கும் தீய ஆவிகள் நிரம்பிய The Further எனும் இருண்மை வெளியில் சிக்கிக் கொள்கிறான் டால்டன். அவனது ஸ்தூல உடலைத் தீய சக்திகள் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். முதல் பாகத்தில், கோமாவில் இருக்கும் டால்டனுக்காக அவனது தந்தை ஜோஷ் லாம்பேர்ட் சூட்சுமப் பயணம் மேற்கொண்டு, இருண்மை வெளியில் மகனின் சூட்சும உடலைக் கண்டுபிடித்து மீட்டு வருவார். இரண்டாம் பாகத்தில், தீய சக்தி பீடித்த தந்தையை மீட்க மகன் மீண்டும் சிவப்புக் கதவின் பின்னாலிருக்கும் இருண்மை வெளிக்குள் செல்வான். மீண்டும் அது போல் நடக்காமல் இருக்க, இருவரின் நினைவையையும் அழித்து விடுவார்கள்.

இந்தப் பாகத்தில், கல்லூரி செல்லும் டால்டனுக்கும், ஜோஷுக்கும் இடையேயான தந்தை – மகன் உறவில் ஏற்படும் இடைவெளியில் இருந்து படம் தொடங்குகிறது. ஓவிய வகுப்பில், உள்ளிருந்து கலை வரவேண்டும் என ஆசிரியை சொல்ல, தன் நினைவடுக்கில் நிழலாய்ப் படர்ந்திருந்த சிவப்புக் கதவை வரைகிறான் டால்டன். தனக்கு ஏதேனும் பிரச்சனை இருக்குமா என மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது ஜோஷின் நினைவடுக்கு மீண்டும் கிளறப்படுகிறது. சிவப்புக் கதவு மீண்டும் தந்தையையும் மகனையும் அமானுஷ்யமாகத் துரத்தத் தொடங்குகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

முதலிரண்டு பாகங்களில் ஜோஷ் லாம்பேர்ட் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்த பேட்ரிக் வில்சன், இப்படத்தை இயக்கி நடித்துள்ளார். விவாகரத்தாகி, குழந்தைகளிடம் இருந்து பிரிந்திருக்கும் வலியை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் பேட்ரிக். பத்து வயது சிறுவன் டால்டனாக நடித்திருந்த டை சிம்ப்கின்ஸ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தந்தை மீதான வருத்தமாகட்டும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் ஆழ்வதாகட்டும், சூட்சுமப் பயணத்தில் தந்தையைப் புரிந்து கொள்வதாகட்டும், டை சிம்ப்கின்ஸ் சிறப்பாக நடித்துள்ளார். டால்டனின் தோழி க்றிஸ் வின்ஸ்லோவாக நடித்துள்ள சின்க்ளெயிர் டேனியல் படத்தின் இறுக்கத்தைக் குறைக்க உதவியுள்ளார்.

முதலிரண்டு பாகங்களைப் போல, ஹாரர் அம்சம் மிகுதியாக இல்லாமல், தந்தை மகனுக்கிடையேயான எமோஷ்னல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் ஸ்காட் டீம்ஸ். இப்படத்தொடரின் முந்தைய பாகங்கள் அனைத்திற்கும் லீ வேனல் திரைக்கதை எழுதியிருந்தார். ஹாரர் விரும்பிகள் ஏமாற்றம் அடையக் கூடும் என்றாலும், இன்சிடியஸ் தொடரின் ரசிகர்கர் இப்படத்தை நிறைவாக உணர்வார்கள்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.