32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டார்க் – தனுஷுக்காக எழுதப்பட்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்

Dinesh R சேலம் Published: 16/06/2026 9 நிமிட வாசிப்பு Updated: 19/06/2026 சினிமா
எழுத்து அளவு:

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் மணிமாறன், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின் ப்ரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம்.

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னைத் தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் ரியோ, ”டார்க் படத்தின் ட்ரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் த்ரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தைப் பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்ட்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்துக் கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில் ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியைப் பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்குப் பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ், ”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையைச் சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். ‘இந்தக் கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா? புதுமுகமாச்சே!’ ன்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படத்தினைத் திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பைத் தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அஜய் கார்த்தி, ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதைக் கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்குக் காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தைப் புது முகங்களை நம்பித் தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌

இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாகப் பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புத் தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து படக்குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்கக் கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.

படப்பிடிப்புத் தளத்தில் என்னுடைய சின்னச் சின்ன அசைவுகளையும் துல்லியமாகக் கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.

டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து, இதனை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன், ”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.

தயாரிப்பாளர் மணிமாறன், மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்தப் படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவரின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாகக் காரணமாகவும் இருந்தது.

இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைத் திரையில் செய்திருக்கிறோம்.

நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்புத் தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்புத் தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு, ”டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாகப் பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காகப் படிக்க வேண்டும் என்றார்கள். படித்தேன். உதவி இயக்குநராகப் பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரைச் சந்திக்க வேண்டும் என்றார்கள். சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள். அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன். ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து, பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்குச் சென்று விட்டேன். அந்தத் தருணத்தில் ஒரு ஃபோன் வருகிறது. டாடா படத்தின் கதையைச் சொல்கிறேன். அந்தக் கதையைச் சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனைப் படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.

தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையைச் செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்குச் செலவைக் குறைக்க முடியும் என்பதைப் பார்த்துப் பார்த்துச் செய்தேன்.

கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.

அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கிக் கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்கத் தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது, ‘நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.

டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரைத் தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவைப் பற்றி படித்திருக்கிறேன், ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற அடுத்த நாள் என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.

இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன், ‘அஜய் ஓகேவா?’ என்று.

நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமேக்ஸை படமாக்குவதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்தக் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்புத் தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து, ‘ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா?’ என்று கேட்டார். எனக்குப் புரியவில்லை. அஜயிடம், ‘நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும்’ என்றேன். இறுதியில் இயக்குநரைச் சமாதானப்படுத்தி அதே காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாகச் சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட்’ சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்குப் படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்தச் சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.