

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் R. ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா T, வாட்ஸப் மணி, டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
டத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், ”இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும் கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ் அற்புதமாக வித்தியாசப்படுத்திக் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்” என்றார்.
நடிகை மடோனா செபாஸ்டியன், ”இந்தக் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துப் போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கிஷோர் குமார், ”இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம். என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களைச் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.
‘காதலும் கடந்து போகும்’ படத்தைப் பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலகப் பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.
இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்புத் திறனால் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.
இன்றைய சூழலில் காதலில் சிட்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்” என்றார்.
நடிகர் சனந்த், ” ஹார்ட்டின் பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தக் கதையில் பல அடுக்குகள் உள்ளதைப் பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தைப் பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.
இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ் அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கணும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்” என்றார்.

