32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“நூறு சாமியில் ஒரு சாமி இயக்குநர் சசி” – மிஷ்கின்

Dinesh R சேலம் Published: 14/06/2026 7 நிமிட வாசிப்பு Updated: 19/06/2026 சினிமா
எழுத்து அளவு:

‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் முன் வெளியீட்டுக்கு நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஃபீல் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார். வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம், “ஒரு நாள் இயக்குநர் சசி ஃபோன் செய்து, ஒரு சூழலை விவரித்துப் பாடலுக்கான மெட்டு வேண்டும் எனக் கேட்டார். அதுதான் ‘அம்மா அம்மா.. ‘எனும் பாடல். அந்தப் பாடலின் மெட்டைக் கேட்டதும் சசி சாருக்குப் பிடித்துப் போனது. உடனடியாக இந்தப் படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன், ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்தப் படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லாப் படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தைப் போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டேன். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்புப் போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித்,” ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பைத் தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்தத் தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு என்னால் உடனடியாகப் பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்புக் கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னைத் தேடி வாய்ப்புக் கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்துப் பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.

நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். ‘நூறு சாமி’ படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாகப் படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும் எளிமையாகவும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்துப் பார்க்க முடிந்தது.

சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, ‘இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார். அதேபோல் படத்தைப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ”நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மைச் சம்பவத்தைப் படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி. இது போன்றதொரு கஷ்டமான கதையைத் தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியைப் பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்துப் படத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ, அதே போன்று இந்தப் படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்னச் சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி, அவமானம் என அனைத்துத் துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண், பெண் என்ற வித்தியாசம் இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாகக் கிடைக்கும் பல விசயங்கள், பெண்களுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாகச் சொல்லி இருக்கிறார்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின், ”நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா என்பதே சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு, என்னை நேரில் சந்தித்துப் பேசிக் கட்டித் தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால், ஒரு தேசிய விருதை வாங்குவோம், ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம், இல்லை என்றால் ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராகச் சேர்வதற்காக அவரைச் சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்துக் கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்பதைத் தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.

நான் ஆண்களிடம் அதிசயமாகப் பார்க்கும் விசயம் என்னவெனில், அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மைத்தன்மையைத்தான். சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களைப் பெண்களாகவே பார்க்கிறது. பெண்மைத்தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மைத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மைத்தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்தக் கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை, அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள், இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள், நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.

இயக்குநர் சசி, ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்தப் படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.

இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்தப் படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

இந்தக் கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.

தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான் – அது பிச்சைக்காரன். ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான் – அது நூறு சாமி.

இந்தக் கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை. இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள்” என்றார்.

விஜய் ஆண்டனி, ”என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள். அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு. இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை, இந்தப் படத்தில் என்னை ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியது. இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா, அக்கா, தங்கை என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.