Shadow

“Slum Dog: சக்திவாய்ந்த விஜய் சேதுபதியைக் காணலாம்” – பூரி ஜெகன் நாத்

பூரி கனெக்ட்ஸ் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்ஷன் திரைப்படம் “ஸ்லம் டாக்” ஆகும். இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் சார்மி கௌர், “2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக வந்துள்ளேன். எங்கள் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ்த் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.

‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்ஷன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.

விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்புத் திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

விடிவி கணேஷ் சார் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களைப் பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

நடிகை சம்யுக்தா, “பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாகக் கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.

பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்குச் சான்று. முழுப் படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத், “விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூடப் பார்க்க முடியாது. அந்தக் குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்தப் படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியைக் காண்பார்கள்.

‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, “பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.

ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதைத் திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.

படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.