Shadow

“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல், வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ”இந்த இணைய தொடர் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாகப் பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூ, ‘ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதையைச் சொன்னவுடன் எங்களுக்குப் பிடித்தது. அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலும் இந்த இணைய தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும் போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும்.

வதந்தி சீசன் 1 கதையை இயக்குநர் ஆண்ட்ரூ எழுதிக் கொண்டிருக்கும்போதே சீசன் 2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார். சீசன் 1 – ஒரு கதையாக இருக்க வேண்டும், ஒரு க்ரைம் இருக்க வேண்டும், ஒரு ஊரில் நடந்திட வேண்டும். சீசன் 2 – வேறொரு க்ரைம். அதனை மதுரை பின்னணியில் சொல்லலாம் எனச் சொன்னார். இதுதான் எங்களுக்கு முதல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் ஆண்ட்ரூ மதுரையைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்தக் கதைக்களத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்வதற்காகப் பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதைத் திரையில் அவர் சின்னச் சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் மூசா ராசா எனும் கதாபாத்திரத்துடன் எளிதாகப் பயணிக்க முடியும்.

மூசா ராசா என்ற கதாபாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காகச் சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாங்கள் இருவரும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம் ‘ படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து வெகுவாகக் கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மதுரைப் பின்னணி, சசிகுமார் நடிக்கிறார்,ஆனால் ஒரு அருவாள் இல்லை, கத்தியில்லை, ரத்தம் இல்லை என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே, அவர் மூசா ராசா என்ற கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என்பது தெரியவரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர்.

வதந்தி சீசன் 2 படத்தின் பணிகளைத் தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையாகட்டும், கதாபாத்திரங்களாகட்டும், இசையாகட்டும்! ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

வதந்தி சீசன் 1-க்குப் பிறகு, சீசன் 2-விற்கு இயக்குநர் ஆண்ட்ரூ திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சீசன் 2 விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதை தான் இது. அதனால் தான் வதந்தி சீசன் 1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் 2 வெளியாக உள்ளது” என்றனர்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், ”வதந்தி சீசன் 1 – ஒரு ஆர்கானிக் சக்சஸ். அதற்குப் பிறகு வதந்தி சீசன் 2-வை அறிமுகப்படுத்தும்போது, இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. யாரும் பார்க்காத தருணத்தில் கல்லைத் தூக்குவது பெருமை அல்ல. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்லைத் தூக்குவது தான் சவாலானது. எதிர்பார்ப்புகள் இல்லாத தருணத்தில் வதந்தி சீசன் 1 இயக்கியதை விட அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தத் தருணத்தில், இதன் சீசன் 2-வை இயக்கி வெற்றியடையச் செய்வதில் தான் எனக்கான சவால் இருக்கிறது என நினைக்கிறேன்.

இந்தக் கதையை எழுதி அமேசான் ப்ரைம் வீடியோவிற்குச் சமர்ப்பிப்பதற்கு முன் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.‌ அவர்கள் தான் இன்னும் ஏதாவது புதுமையாகச் சேர். சேர்த்துக்கொள். சேர்த்துக் கொண்டே இரு என ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள். திரைக்கதையை நிறைவு செய்த பின் அவர்களின் கஷ்டம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இதனை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அவர்கள் தான் அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்தனர். இதற்காக இந்தத் தருணத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குவதற்காகப் படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில், மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காகத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்.

பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதைக்களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காகத் தொடர்ந்து 43 நாட்கள் மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர். இதற்காகவும் அனைவருக்கும் நன்றி.

வதந்தி சீசன் 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக S.J.சூர்யாவிற்கு நன்றி. சீசன் 1-ல் S.J.சூர்யா, அந்தக் கதாபாத்திரத்தைக் கையாண்ட விதம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. வதந்தி சீசன் 2-விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும் போது நான் முழுக் கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை. அவரை மதுரையில் சந்தித்துக் கதையைச் சொன்னதும், அவர் எந்தத் தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு, ‘முழுத் திரைக்கதையை எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள்’ என்றார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை மூசா ராசா கதாபாத்திரத்தைச் சிறப்பாக எழுதத் தொடங்கினேன். இதுவே வதந்தி சீசன் 1-க்கும், சீசன் இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.

இசையமைப்பாளர் சைமனைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன் 1-க்கான இசை வேறு. சீசன் 2 விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லி தான். நான் கண்ணை மூடிக்கொண்டு இந்தத் தொடரின் எபிசோட்டைப் பார்க்கும்போது இசையே கதையைச் சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலைநுட்பம் கொண்டவர். அதனால் அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சசிகுமார், ” வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில் என்னைச் சந்தித்துச் சொன்னார். டைட்டிலைக் கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி,குட்டிப் புலி என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னைப் போலீஸாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டேன். ‘நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூசா ராசா கேரக்டரில் நடிக்கிறனா?’ என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீஸாக மூசா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரெளடியாக இல்லாமல் போலீஸாக நினைத்துக் கதையை எழுதியதால் அந்தக் கதையை முழுவதுமாகக் கேட்டேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால் அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூவின் கடும் உழைப்புதான் காரணம்.

போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸைப் போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்கக் கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார். அந்தக் கதாபாத்திரம், மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு நிரபராதியைக் காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2-வின் கதை நகரும்.

இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்தத் தொடரில், ‘பாவம் ஹீரோ! போலீஸ் எப்படியாவது குற்றவாளியைக் கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும்’ என்ற பரபரப்பு இருக்கும்.

அதைவிட வதந்தி சீசன் 1 S.J.சூர்யா நடித்துப் பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணைய தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாகச் சிரித்தாலும், மூசா ராசா கேரக்டர் சிரிக்காது என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்புத் தொடங்கி இரண்டு நாள் வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இயக்குநர் என்ன சொன்னாரோ அதை மட்டும் தான் செய்தேன்” என்றார்.