32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“Mrs & Mr – நான் வைத்த தலைப்பு” – அம்பிகா

Dinesh R சேலம் Published: 08/06/2025 3 நிமிட வாசிப்பு Updated: 09/06/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய நடிகை அம்பிகா, ”இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்குp பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலைத் தேர்வு செய்தது நான்தான்.‌ இது தொடர்பாக வனிதா பேசிய போது, ‘ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா?’ என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தைப் பார்த்தேன். பொழுதுபோக்காக இருக்கிறது.

இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தைத் தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிடக் கடினம். அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிடக் கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை ஃபாத்திமா பாபு, ”நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னைப் பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனைத் தனது இடது கையால் புறந்தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது.

இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்.

இந்தப் படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியைக் கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஷகிலாவை இந்தப் படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

ஷகீலா, ”வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தைத் தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம்.

பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்தப் படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன.

எனக்குக் குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா.

அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்தார். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.