32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“வனிதாவின் அன்பும் திமிர்த்தனமும்” – இயக்குநர் வசந்தபாலன் | Mrs & Mr

Dinesh R சேலம் Published: 08/06/2025 4 நிமிட வாசிப்பு Updated: 09/06/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களைப் பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப் பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தச் சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம். தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம்.‌ அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையைக் கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது.

ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளைக் கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாகப் பெருமிதமாகவும் பேசலாம். இதனைப் பெருமிதமாகக் கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனைச் செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரைக் கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.

இங்குப் பெண்களுக்கான குரலைப் பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம்.

ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்குப் பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன்.

தற்போது ‘ஹெர் ஸ்டோரீஸ்’ என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது. இந்தப் பதிப்பகம் நூறு பெண்களின் கதையைச் சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராகத் தங்களது கதையைச் சொல்ல வேண்டும். அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா, இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளைச் சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன், பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்தக் காணொளியை பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தைப் பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது. அந்த வகையில் இந்தச் சமூகத்திற்குச் சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது.

ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்தக் கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவைக் காமத்துடன் தொடர்புப்படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்குக் கதை இருக்கிறது. அந்தக் கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.

என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு. அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லாப் பெண்களும் அப்படித்தான்.

எல்லாப் பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள். திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.