32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மண்டாடி: ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்து” – பீட்டர் ஹெய்ன்

Dinesh R சேலம் Published: 02/09/2026 4 நிமிட வாசிப்பு Updated: 10/09/2026 சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய நடிகை மகிமா, “ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னு தான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னு தான் நான் நெனச்சேன். ஆனா, மதி இந்தப் படத்தை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பா மாத்தியிருக்காருங்குறது நிஜமாவே நம்ப முடியல. அவரோட அந்தப் பார்வை நான் ஆரம்பத்துல எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருசா வந்திருக்கு.

இந்தப் படத்துல வேலை செஞ்ச குழு சந்திச்ச சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பா நடுக்கடல்ல தினமும் 14 மணி நேரம் ஷூட்டிங் பண்றதுங்குறது சாதாரண விஷயம் கிடையாது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் சாரோட உழைப்பைப் பத்திச் சொல்லியே ஆகணும். கடலோட அந்த ஆழமான தன்மையை இவ்ளோ தத்ரூபமா கேமரால கொண்டு வர்றது ஈஸியான காரியமே கிடையாது, ஆனா அதை அவர் மிகச் சிறப்பா செஞ்சிருக்கார்.

எனக்குத் தெரிஞ்ச மிகவும் கடின உழைப்பாளியான, தைரியமான ஒரு ஆக்‌ஷன் டைரக்டர்ன்னா அது பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் தான். இந்தப் படத்துல அவரோட அசாத்தியமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் அவரோட ஷார்ப்பான கட்ஸ் மூலமா படத்தோட அந்த விறுவிறுப்ப கொஞ்சமும் குறையாம கொண்டு போயிருக்கார்.

இந்த படத்துல சூரியோட உழைப்பும், அவரோட அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் ரொம்பப் பெருசு. அவ்ளோ டயர்டா இருந்தாலும், உடம்புல சின்னச் சின்ன காயங்கள் பட்டாலும் கூட எந்தவொரு ஷாட்டுக்கும் அவர் சமரசம் செய்யவே இல்லை. ஒரு துணை நடிகரா தன் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல ஒரு ஹீரோவா உயர்ந்திருக்கார்னா, அதுக்கு அவரோட அந்த விடாமுயற்சிதான் காரணம்.’மண்டாடி’ படம் கமர்ஷியலா ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், இந்தப் படத்துல வேலை செஞ்ச அத்தனை பேரோட அசாதாரண திறமைக்கும் இது ஒரு அடையாளமா இருக்கும்னு நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

பீட்டர் ஹெய்ன், “இயக்நர் மதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், குறிப்பாக நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல் (Boat Chase) காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் அனுபவமாக அமையும். தனது 34 கால சினிமா பயணத்தில் எக்ஸ்ட்ரீமான ஒரு சண்டைக்காட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையை இயக்குநர் மதி இந்தப் படத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கும் எனது நன்றி. நள்ளிரவிலும் சுறுசுறுப்பாக பணியாற்றிய இயக்குநர் மதியின் அர்ப்பணிப்பு இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இப்படத்தின் நாயகன் சூரி, எந்தவொரு கடினமான காட்சிக்கும் ‘முடியாது’ என்று சொல்லாமல் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒரு சண்டைக்காட்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், மீண்டும் கரைக்குத் திரும்பாமல் நடுக்கடலிலேயே சக்கர நாற்காலி உதவியுடன் படகில் அமர்ந்தபடியே காட்சிகளை முடித்துக்கொடுத்த சூரியின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அவருக்கு இணையாக நடிகர் சுஹாஸும் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மோட்டார் போன்ற எந்தவித நவீன தொழில்நுட்பமும் இன்றி, இயற்கையோடு போராடி காற்றின் விசையை மட்டுமே நம்பி சுமார் 20 கிலோமீட்டர் நடுக்கடலில் படமாக்கப்பட்ட இந்தப் படகு துரத்தல் காட்சிகள் மிகவும் சவாலானதாக அமைந்தது.

இப்படிப்பட்ட மிகக் கடினமான சூழலிலும் ஒவ்வொரு படகிலும் கேமராக்களைப் பொருத்தி நேர்த்தியாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநரின் உழைப்பு மிகப்பெரியது. சண்டைக் கலைஞர்கள் மட்டுமின்றி, படப்பிடிப்பிற்கு உறுதுணையாக இருந்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும், இப்படம் சிறப்பாக உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு போர்க்களத்தில் நிற்பது போன்ற சவாலான சூழலிலும் ஒட்டுமொத்த குழுவும் இணைந்து உருவாக்கியுள்ள ‘மண்டாடி’, திரையரங்குகளில் ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்தாக அமையும்” என்றார்.

இயக்குநர் மதிமாறன், “எனக்கு இந்தப் படத்தைக் கையாளுவதற்குப் பெரிய சவாலாக அமைந்தது தொழில்நுட்பக் கலைஞர்கள் தான். என்னைச் சுற்றி எப்போதுமே பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கதிர் சார் போன்ற பெரிய டெக்னிஷியன்ஸ் இருப்பார்கள். பீட்டர் மாஸ்டருக்கு நிறைய டார்ச்சர் கொடுத்திருக்கிறேன். கதிர் சார், ‘கேமரா கடலில் விழுகக்கூடாது, ஒரு பாதுகாப்பான கோணத்தில் வைக்கலாம்’ என்று சொன்னபோது, அவர் ஒரு ப்ரொஃபசர்போல வரைபடம் வரைந்து காட்டி, நான் நினைத்ததைச் சாதித்துக்கொடுத்தார்.

இந்தப் படம் என்னைக் கண்டுபிடித்ததா அல்லது நான் இந்தப் படத்தைக் கண்டுபிடித்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி பாரம்பரிய விளையாட்டோ, அதேபோல்தான் மீனவர்களின் இந்தப் பாய்மரப் படகுப் பந்தயமும். இதற்கும் அரசாங்கம் மாநில மற்றும் தேசிய விருதுகள் வழங்கி அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி நடந்தால் அதுவே இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்” என்று கூறினார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.