32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

Dinesh R சேலம் Published: 06/10/2016 3 நிமிட வாசிப்பு Updated: 12/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Namitha in Pulimurugan

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தனது ரீ-என்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்குத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் . ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாளத் திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ-என்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் உள்ளார் நமீதா.

புலிமுருகனில் நடித்த அனுபவத்தைக் குறித்து, “கடந்த ஆண்டு ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்தப் படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்ச்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாப்பாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருப்பவள்.

புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல் வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.

பொதுவாக மலையாளப் படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றைப் பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது” என்றார்.

புலிமுருகன் படத்தின் நாயகனான மோகன்லாலுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பற்றி, “அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இன்டெலெக்ச்சுவல். ஆமாம், அத்தனைப் புத்தகங்களையும் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்தப் பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே, ‘ஓ… தாராளமா!’ என்று எடுத்துக் கொண்டார். அந்தப் படம் அப்படிப் பெரிதாய் வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.

பிராணிகளை அதிகம் நேசிக்கும் நமீதாவிற்கு, புலிகள் பற்றிய ஒரு படம் ரீ-என்ட்ரியாக அமைந்தது தற்செயலானது என்கிறார். மேலும், “என் வீட்டில் நான் இப்போது மூன்று சிட்சு வகை நாய்க்குட்டிகளை வளர்க்கிறேன். அவை நாய்கள் அல்ல, என் குழந்தைகள். என் குடும்பத்தில் அவர்களும் இணைந்துவிட்டார்கள். புலிமுருகன் கதை சொல்லும்போது ஆரம்பத்தில் இது வேட்டை கதை போல உள்ளதே என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப் போக வன விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு படம் என்பது புரிந்தது” என்றார்.

அரசியல், சினிமா என இரட்டைச் சவாரி செய்வதைப் பற்றி, “இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன். அதற்காக மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அ.தி.மு.க.-வில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை. பரத்துடன் நடிக்கும் “பொட்டு” படம் அல்மோஸ்ட் ஓவர். ஜானி என்பவர் சொன்ன கதை நன்றாக உள்ளது. அடுத்த நகர்வுக்குக் காத்திருக்கிறேன். இன்னும் சில படங்களின் அறிவிப்பும் வரும். மலையாளம் போலவே தமிழ், தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார் தெளிவாக.

தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக்கான அம்மாவின் உடல்நலம் பற்றிக் கேட்டதற்கு, “மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்குக் கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்கள்” எனத் தீர்க்கமாக சொல்லி முடித்தார் நமீதா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.