Shadow

ரெமோ விமர்சனம்

Remo thirai vimarsanam

மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை.

வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு போல் வெள்ளந்தியானவர்.

நிற்க.

படத்தில் இன்னொரு ரோட் சைட் ரோமியோவான ஹாரிஸ்க்கும், கண்டதும் காதல் வருகிறது. ரெமோ நர்ஸ் மீது பைத்தியமாக இருக்கிறான். நாயகனான எஸ்.கே., காவியா தன்னைக் காதலிக்க வைக்க நாடகமாடி அவள் மனதைக் கலைக்கிறான். ஆனால், காமெடியனான ஹாரிஸ் எத்தகைய பாசாங்கோ அரிதாரமோ இல்லாமல் நேர்மையாக முயற்சி செய்கிறான். நாயகனுக்கும் காமெடியனுக்குமான மனப்பாங்கு (Attitude) வேறுபாட்டிற்கு, இன்னொரு காட்சியைக் கூட உதாரணமாகச் சொல்லலாம். கே.எஸ்.ரவிக்குமார் தன் படத்திற்கு நாயகன் தேடுகிறார் என்பதை அறிந்து கொண்டு, அதில் ஹாரிஸ் கலந்து கொள்ளக் கூடாதென அவனது மூக்கை உடைத்து விடுகிறான் எஸ்.கே. தன் திறமையால் எதையும் சாதிப்பதை விட, மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பது இலகுவென நினைக்கும் ஆளாக இருக்கிறான் இப்படத்தின் நாயகன். ஹாரிஸ் ஹீரோ செலக்‌ஷனில் கலந்து கொள்ளவே கூடாதென நினைக்கும் எஸ்.கே.வின் பன்ச் என்ன தெரியுமா? “என்னை மாதிரி சாதாரண பசங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது; நாங்க தான் ஏற்படுத்திக்கணும்” என்பதே! மூக்கு உடைப்படும் ஹாரிஸாக யோகி பாபுவும், ஹாரிஸின் மூக்கை உடைக்கும் எஸ்.கே.வாக சிவகார்த்திகேயனும் நடித்துள்ளனர்.

அதே போல், திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவ்யாவிடம் பேசிப் பேசியே, அவளை மருத்துவர் விஸ்வா மீது வெறுப்படையச் செய்து விடுகிறான் எஸ்.கே. ரெமோ நர்ஸாகவும், எஸ்.கே.வாகவும் சிவகார்த்திகேயன் கலக்கியுள்ளார். படத்தினை ரசிக்க முடிவதற்கு அவர் மட்டுமே காரணம். கண்களைச் சிமிட்டுவது, பிங்க் நிறச் சாயம் பூசிய உதட்டுச் சுழிப்புகள், கைகளில் அபிநயம் பிடிப்பது, நெற்றியில் விழும் முடியை ஊதுவது என அவர் பெண்ணாகத் தோன்றும் அனைத்தும் ஃப்ரேம்களுமே ரசிக்க வைக்கின்றன. மருத்துவமனையில், ஆசிட் வீசிய தடியன்களை ரெமோ நர்ஸ் புரட்டி எடுக்கும் சண்டைக் காட்சி செம மாஸ். நன்றாக நடனமாடுவதோ, நிறைவாக நடிக்கவும் செய்கிறார். அவரை ஸ்க்ரீனில் பார்த்தால், ‘நம்ம பையன்’ என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அது தான் அவரது பலம். எனினும், ‘உண்மையான காதல் ஜெயிக்கும்; காதலில் ஜெயித்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்; நாயகிக்கு காதல் வராவிட்டால் என்ன? தன் காதலை சாஸ்வதமான உண்மையென நினைத்து, காதல் வரும் வரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கலாம்’ என நம்பும் இளைஞனாக நடிப்பதை சிவகார்த்திகேயன் தவிர்ப்பது நலம்.

நான்சியாக நடித்திருக்கும் பேபி ரக்‌ஷா, செம க்யூட். மருத்துவர் (!?) காவ்யாவாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏமாறுவதற்கும், காதலில் விழுவதற்காகவுமே நேர்ந்து விடப்பட்ட வெகுளி நாயகி. கடைசி ஃப்ரேம் வரை சலிக்காமல் அழகான லூசாகவே வருகிறார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் அனைத்துமே, அனைவருமே அழகாகத்தான் தெரிகின்றனர். மோகன சந்தோஷாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், வள்ளிகாந்தாக சதீஷும் நாயகனின் நண்பர்களாக வந்தாலும், யோகி பாபுவும், சிவகார்த்திகேயனும்தான் கலகலப்பிற்கு உத்திரவாதம் அளிக்கின்றனர். கதாபாத்திர வடிவமைப்பை வைத்துப் பார்த்தால், குணத்தில் நாயகனை விட யோகி பாபு ஒரு மாற்று அதிகமாகவே ஜொலிக்கிறார். படத்திற்குப் படமும் மெருகேறி வருகிறார். படத்தின் முடிவில், நர்ஸைத் தேடி அலையும் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும், யோகி பாபு தான் உண்மையான ரெமோவோ என யோசிக்க வைத்து விடுகிறார். இப்படியெல்லாம் பார்வையாளர்களுக்குச் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் இயக்குநர், நர்ஸின் பெயரை ரெஜினா மோத்வாணி என வைத்து, அதைச் சுருக்கி ரெமோவாக்கி விட்டார் போலும். ரெமோ நர்ஸ் தான் எஸ்.கே. என நாயகிக்குத் தெரிய வைக்கும் இடமும் சுவராசியமான திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு. இது போன்ற சின்னஞ்சிறு சுவாரசியங்களாலும், சிவகார்த்திகேயனின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸாலும் படத்தை ரசிக்கும்படி செய்து விடுகிறார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்.