32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

படையாண்ட மாவீரா – தயாரிப்பாளர்களின் குரல்

Dinesh R சேலம் Published: 10/09/2025 6 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ”செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர். கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை” என்றார்.

தயாரிப்பாளர் குறளமுதன், ”நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னைச் சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றிப் படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்தக் கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது எனத் திட்டமிட்டோம். இந்தப் படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணைக் காக்கவும் பெண்ணைக் காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதைப் பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்கத் தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரெளட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்டத் தொடங்கினோம்.

நாங்கள் வடத்தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம்.‌ அத்துடன் இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்தப் படத்தைப் பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் உமாதேவன், ”படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா என்ற சந்தேகம் தான் எழுந்தது. இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்தத் திரைப்படத்தை உருவாக்கினோம்.

இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவைச் சந்தித்தபோது எங்களுக்குத் தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்தச் சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதித் தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரு பெரும் சமுதாயங்களாகப் பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ்ச் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை” என்றார்.

தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன், ”தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்தத் தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியிருக்கிறார். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி. நல்ல சினிமாவைத் தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள். சினிமாவிற்குச் சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். இந்தத் திரைப்பட தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்தத் தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்தச் சடலத்தைத் தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாகச் சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்தக் கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காகப் பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார். இப்படி மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,” என்றார்.

தயாரிப்பாளர் ‘கிரியாடெக்’ பாஸ்கர், ”இயக்குநர் கௌதமனை 2021ஆம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்த போது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பைப் பற்றிப் பேசினார். அப்போது நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும் இருந்தேன்.

அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினைச் சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தைக் கடந்து சமகாலத்தில் மக்களுக்காகப் பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையைக் கண்டறிந்தோம். இவரைப் போன்ற மக்களுக்காகப் பாடுபட்ட அரசியல் தலைவர்கள் அனைத்துச் சமூகங்களிலும் இருப்பதையும் கண்டறிந்தோம். இப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கினோம். அரசியல்வாதி என்றால் பகட்டு அரசியல் செய்கிற அரசியல்வாதியாக தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைவர்கள் எளிமையாக தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

2023ஆம் ஆண்டில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் வாழ்வியலைப் பேசுகிறது. ஒரு சாமானிய மனிதன் எந்த நிலைக்கு உயரலாம், எப்போது உயரலாம், எப்போது மக்களால் போற்றப்படலாம் என்றால் அவர் மக்களுக்காக சுயநலமில்லாமல் சிந்தித்துக் களத்தில் இறங்கிப் போராடும் போது தான்.

இந்தத் திரைப்படத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டேன். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது எதற்காக சினிமா, உங்கள் துறை இதுவல்லவே எனக் கேட்டனர். அவர்களிடம் ஒருவரை பற்றி அரசியல் காரணங்களால் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றிய நிஜமான முகத்தை – எல்லா மக்களையும் நேசித்த ஒரு தலைவரைப் பற்றி- மக்களிடத்தில் சொல்ல வேண்டியது எங்களது கடமை. ஒரு குடிமகனாக எங்களுடைய பொறுப்பு என்றும் எடுத்துரைத்தேன். அத்துடன் மறைக்கப்பட்ட காடுவெட்டி குரு போன்ற மக்கள் தலைவர்களைப் பற்றிய வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படம் ஆபாசம் இல்லாமல், வன்முறை இல்லாமல் உருவாகி இருக்கிறது. அதனால் இப்படம் குடும்பத்தினருடனும் பெண் பிள்ளைகளுடனும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் வகையில் தயாராகி இருக்கிறது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.