Shadow

“காடுவெட்டி குரு என்பவர் யார்?” – பாலமுரளி வர்மா | படையாண்ட மாவீரா

இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிகழ்வில் பேசிய வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ”ஒரு திரைப்படம் வெள்ளைத்தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்தத் திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கெனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதைக் காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம். இன்னும் சொல்லப்போனால் காதுகளின் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம்.‌ அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களைப் பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு. அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், அதைத் திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.

நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைப் பற்றி நாங்கள் அந்தத் தருணத்திலேயே சிந்தித்தோம்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளைத் திட்டமிட்ட போது அதனை எதிர்த்துத் தீரமுடன் போராடி வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு. அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தைத் தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காகச் செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தைப் பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு. அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்துச் சென்றார். வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார். இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு. மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது.‌ இதனைத் திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.

இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள். இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது. அங்குள்ள நீரில் பாதரசமும், செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டு மடங்கு அதிகமாகக் காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இப்படி உடல் உறுப்பு பாதிப்புகளுடன் தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள். இந்தச் சூழலில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். தினமும் மக்கள் அங்கு மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்துப் போராடியவர் தான் காடுவெட்டி குரு. இதைப் படைப்பின் மூலமாகச் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதே தருணத்தில் இந்தப் படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.