32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER

Dinesh R சேலம் Published: 05/02/2026 4 நிமிட வாசிப்பு Updated: 09/02/2026 சினிமா
எழுத்து அளவு:

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

விழாவில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், “லீடர். இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கும். இந்தப் படத்தின் எசன்ஸ் இதுதான். இதே போல் தான் படம் முழுவதும் இருக்கும்.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும், பிள்ளையும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்க் நுழைந்து விடுவார்கள். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை தான் என்னுடைய இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதுதான் முக்கியமானது.

ஏனெனில் கதைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் திரைக்கதை அமைப்பது தான் சவாலானது. அந்த வகையில் இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் துல்லியமாக செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கிறார். ஜிப்ரானின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் படத்தின் கதையோட்டத்திற்குத் தகுந்தாற்போல் பாடல்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக தூத்துக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஜார்ஜியா நாட்டில் 15 நாட்கள் படபிடிப்பு நடத்தினோம். ஜெய்ப்பூர், சென்னை , ஊட்டி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.‌ ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ மற்றும் ‘ஜனநாயகன்’ படங்களில் பணியாற்றிய எடிட்டர் பிரதீப் ராகவ் தான் இப்படத்திற்கும் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திலும் அவர் நேர்த்தியாகப் பணியாற்றி இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கலை இயக்குநர் துரைராஜுக்கும் என் வாழ்த்துக்கள். படப்பிடிப்புத் தளத்திற்கு சண்டைப் பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ வந்துவிட்டால் அந்தத் தளமே உற்சாகமடைந்திடும். அந்த அளவிற்கு உத்வேகத்துடன் பணியாற்றுவார்.

சிறிய வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி இருப்பேன்.‌ என் தாயிடம் என்றைக்காவது ஒரு நாள் இவர்களைப் போல் நான் ஸ்டார் ஆவேன் என சொல்லி இருக்கிறேன். இதைக் கேட்ட என் தாய் ‘சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.‌

நான் என்னுடைய தந்தையார் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக குடும்பத் தொழிலில் ஈடுபட்டு, என்னுடைய தந்தையாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு என்னை நம்பி முழுப் பொறுப்பையும் வழங்கி விட்டார். நான் கடுமையாக உழைக்கத் தொடங்கினேன். என்னுடைய நிறுவனத்தில் காலையில் முதல் ஆளாக உள்ளே நுழைவேன். அனைவரும் சென்ற பிறகு கடைசி ஆளாக வெளியேறுவேன். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் தொடர்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் இதைத்தான் கடைப்பிடித்தேன். படப்பிடிப்புத் தளத்திற்கு முதல் ஆளாகச் செல்வேன். அங்கிருந்து கடைசி ஆளாக வெளியேறுவேன். நான் எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுக் கவனத்துடன் அர்ப்பணிப்புடன் உழைப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர்.

இன்றைக்கு ஒரு பக்கம் கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மறுபக்கம் மாஸான ஆக்ஷன் படங்கள்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். இந்தப் படத்தில் நல்ல கதையம்சமுள்ள கன்டென்ட்டும் இருக்கிறது. மாஸான ஆக்ஷன் எலிமெண்ட்டும் இருக்கிறது. இந்தத் திரைப்படம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தைப் பார்த்த நானும் எங்களுடைய படக் குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே மகிழ்ச்சியும், சந்தோஷமும், மன நிறைவும் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன்.

சினிமா என்பது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. சினிமாவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். படத்தைத் திரையிடும் திரையரங்குகளிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என நினைப்பேன்.

சினிமா துறை தற்போது கொஞ்சம் இறங்கு முகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வேலை வாய்ப்பு முழுமையாகக் கிடைப்பதில்லை. அதனால் தான் நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பேன். அதேபோல் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இந்த சினிமாத்துறை வளர்ச்சி அடைவதற்கும், மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் உங்களாலான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிப்ரவரி 1 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படத்திற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடுகிறோம்.

இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னதாக பிரம்மாண்டமான முறையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.