32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

Dinesh R சேலம் Published: 07/08/2026 3 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், ‘முடக்கத்தான்’ மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு.

முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா. போன சீசனின் தொடர்ச்சி என்றால் அது இவர் மட்டுமே! ‘பிளாஸ்டிக் பாட்டில் கண்டுபிடிச்சதே சாம்பார் பாக்கெட்டைச் சாய்ச்சு வைக்கத்தான்’ என்பதாகட்டும், ஓரிடத்தில் முந்தைய சீசனின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா போல் இமிடேட் செய்வதாகட்டும், ராமர் பாத்திரத்தை நிறைவாக அனுபவித்துச் செய்துள்ளார் விவேக் பிரசன்னா.

மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணியாக இளம் நடிகர் யஷ்வந்த் நடித்துள்ளார். சற்றே ஜாடை, சில ஃப்ரேம்களில், கவினை ஞாபகப்படுத்துவது போல் உள்ளார். மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஜோடியாக நிலாவதி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள ரேவதி ஷர்மாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார். நடிகர் தேர்விலும், அவர்களிடம் நடிப்பை வாங்கியதிலுமே பாதி வெற்றியைப் பெற்றுவிடுகிறார் இயக்குநர். CDRF (Centre for DNA Research and Forensic tests) அதிகாரியாக நடித்துள்ள சேத்தனும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யஷ்வந்தின் தங்கை வெண்பாவாக நடித்துள்ள தீபிகா ஆனந்த், அவரது தோழி பூர்ணியாக நடித்துள்ள வர்ஷினி கார்மேகம், வெண்பாவின் அம்மாவாக நடித்துள்ள பேச்சி முத்துப்பாண்டியன், சுந்தரேசனின் அம்மாவாக நடித்துள்ள கீத்தி சங்கீதா என அனைவருமே தனித்து மனதில் நிற்குமளவு சிறப்பாக நடித்துள்ளனர். தொடரின் உபதலைப்பை, ‘மிஸ்ட்ரி ஆஃப் வெண்பா’ என வைத்திருக்கலாம்.

இந்தத் தொடரில், இரண்டு தம்பதிகளின் வாழ்க்கையை அழகாகக் காட்டியுள்ளனர். ஒன்று, பாசக்காரரான மூசா ராசாவும் அவரது மனைவி சுமயாவும்; காவல் கண்காணிப்பாளர் ரத்திகா நாயரும், அவரது வக்கீல் கணவர் சுகுமாரனும் ஆவர். சுகுமாரனாக அர்ஜுன் நந்தகுமாரும், ரத்திகா நாயராக அனகா மருதோராவும் நடித்துள்ளனர். அனகா மருதோரா, தொடர் நெடுகே நல்ல காவலராகத் தோன்றி, உண்மையை எப்படியேனும் வெளியில் கொணர ராசா மூசாவிற்குத் தூணையாக நிற்கிறார். மிகப் பிரமாதமான கதாபாத்திரத்தில் நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் தன்னைப் பொருத்திக் கொண்டு ரசிக்க வைத்துள்ளார். மூசா ராசாவின் மனைவி சுமயாவாக ‘டாடா’ படத்து அபர்ணா தாஸ் நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், மனதில் நிற்கும்படியாகத் தன்னிருப்பைப் பதிந்துள்ளார். அவருக்கும் சசிகுமாருக்குமான கணவன் – மனைவி அந்நியோன்யத்தை வலிந்து திணிக்காமல் அழகாக எழுதிக் காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். அறத்தின் பக்கம் நிற்கும் மூசா ராசா பாத்திரத்திற்குக் கச்சிதமாக அளவெடுத்தது போல் பொருந்தியுள்ளார் சசிகுமார். சைமன் கே கிங்கின் பின்னணி இசையும், பாடல்களும் தொடருக்குப் பெரும் பக்கபலமாய் அமைந்துள்ளன.

ஆண்ட்ரூ லூயிஸ், ‘தி ஃபேபிள் ஆஃப் வெலோனி‘யை விட மிகச் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் ஸ்க்ரிப்ட்டை எழுதியுள்ளார். முதற்பாகம் போல் முற்றிலும் வதந்தியை மையப்படுத்தியதாக இல்லாமல், நேரடி விசாரணையாகவே பயணிக்கிறது. ஒரு காட்சியில், பத்திரிகை முதலாளியாக ஹரீஷ் பேராடி தோன்றினாலும், அவர் முந்தைய பாகத்தில் வதந்தியைப் பரப்பியது போல்  பரப்புவதாகக் கொள்ள முடியாது. முடக்கத்தான் மணியை Casonova-வாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன என்ற வசனம் இடம்பெற்றாலும், ஜல்லிக்கட்டில் தோரணையாக வென்று அலப்பறையைக் கூட்டும் மணி கதாபாத்திரத்தின் மிகைப்படுத்திய புகழாக அதைக் கொள்ளமுடியுமே தவிர வதந்தியாக அதைக் கொள்ள முடியாது.

முதல் சீசனில், சில இடங்கள் பார்வையாளர்களின் பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கும். மேலும், முதல் சீசன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராகப் பயணிக்காமல் வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் (SJ சூர்யா) அகப்பயணமாகவே இருக்கும். ஆனால், இந்த சீசனில் அப்படி எந்த டல்லான மொமன்ட்டும் இல்லாமல் விசாரணையை மையப்படுத்தியே எட்டு அத்தியாயங்களும் நகர்வது சிறப்பு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.