Shadow

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் – காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.

வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது யாரென விவேக் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் தொடரின் கதை.

த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இது த்ரில்லர் படம் என்பதை விட, வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் அகப்பயணம் என்றே சொல்லவேண்டும். எழுத்தாளர் நாசர், ஒரு நாவலே எழுதி விடுகிறார். விவேக்கோ, காவல்துறை மேலதிகாரிகளின் எதிர்ப்பை மீறி ஓராண்டுக்கும் மேலாக விசாரணை செய்து கொண்டுள்ளார்.

படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார், துணை ஆய்வாளர் ராமராக நடித்துள்ள விவேக் பிரசன்னா. வசன உச்சரிப்பில் அவர் காட்டியுள்ள வட்டார நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. லைலாவை ஆங்கிலோ-இந்தியன் ரூபியாக்கி, வட்டாரப் பிரச்சனையை அவருக்கில்லாமல் செய்துவிட்டது சாமர்த்தியம். வெலோனியின் அம்மாவாக லைலா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திதுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். தன் கணவன் மீது கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் செல்லும் காட்சியை நகைச்சுவைக்காக வைத்திருந்தாலும், தொடரின் ஓட்டத்திற்கு ஒட்டாமல் துண்டாகத் தெரிகிறது. ஓர் அத்தியாயம் முடியும் பொழுது, அடுத்து என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டாத சவசவத்தன்மையை ஸ்க்ரிப் கொண்டுள்ளது. எட்டு அத்தியாயங்கள் என்பதை ஆறாகக் கூடக் குறைத்திருக்கலாம் இயக்குநர் ஆண்ட்ரூ லாயிஸ். இடையில் கதை வெலோனியை விட்டு விலகி எங்கெங்கோ பயணிக்கிறது.

சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு அபாரம். மிக நேர்த்தியான கோணங்களில், ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசிக்கும்படி வைத்துள்ளார். ஏஞ்சல் விடுதியில், நாசரும் வெலோனியும் பேசுவது கவிதை போலொரு காட்சியமைப்பு. ஊடகங்களால் மட்டுமே வெலோனி பற்றி அறிந்து கொள்ளும் ஒரு இளைஞன், தன் நண்பர்களிடம், ‘வெலோனி மட்டும் என் மனைவியாக இருந்தால்’ என மனவக்கிரத்தைக் கொட்டி வைக்க, அவனது தோழி கொடுக்கும் ‘நச்’சென்ற பதிலடிதான் மொத்த தொடருக்கான சாரம்சம்.

‘ஐய்யோ, சின்ன பொண்ணு, அழகான பொண்ணு, அதுக்கு ஒரு மனசிருக்கும், மனசுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கும்ல? ஏன்டா பாவிகளா வதந்திய பரப்புறீங்க?’ என குடித்துவிட்டு போதையில் அரற்றுகிறார் எஸ்.ஜே.சூர்யா. வெலோனி மீதான அவரது அக்கறை என்பதே அவரது முன்னாள் காதலியான டயானாவினுடைய மரணத்தின் எச்சமான குற்றவுணர்வே! கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாத விரக்தியில், விடலைப் பையன் டோனியைப் போல், பெரு ஊடக முதலாளி ஹரீஷ் பேராடியின் வன்ம வதந்தியைப் போல், கடைசி அத்தியாயத்தில் ஒரு பெண் மீது ஒரு வதந்தியைக் கட்டமைக்கிறார். இரண்டாம் அத்தியாயம் தொடங்கி, பொய் பறக்கும், வதந்தி தப்பு எனச் சொல்லிக் கொண்டிருந்தவரின் எத அந்தர்பல்டியை ஏற்றுக் கொள்ளக் கடினமாக உள்ளது. விசாரணையில் ஒரு பெண் சொன்ன சிறு பொய்யைக் கண்டுபிடிக்கும் எஸ்.ஜே.சூர்யா நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ள, ‘தேவிடியா முண்ட’ என ஆவேசப்படுகிறார். ஒரு கதையை உருவாக்கி, ‘இது தான் நடந்தது’ என ஒத்துக் கொள்ளச் சொல்லி அந்தப் பெண்ணின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்பந்திக்கிறார். அந்தப் பெண் கொலையாளி இல்லை எனத் தெரிந்தவுடன், ‘என்ன இருந்தாலும், அது அந்தப் பொண்ணோட தனிப்பட்ட வாழ்க்கை இல்ல?’ என மீண்டும் நல்லவராகிவிடுகிறார். ஆண்ட்ரூ லூயிஸ், கடைசி அத்தியாயத்தை இவ்வளவு அலட்சியமாகக் கையாண்டிருக்கக்கூடாது.

தொடரின் கவித்துவத்திற்கு உதவும் ஓவியமாக, வெலோனி பாத்திரத்தில் சஞ்ஜனா நடித்துள்ளார். ‘மம்மா’ என அழைத்து லைலாவுடன் அவர் கொள்ளும் மனத்தாங்கல், நாசருடனான தந்தை மகள் உறவு என வெலோனி தோன்றும் காட்சிகள் எல்லாத்திலும் தன் நடிப்பால் அசத்துகிறார். முன் பின் எனப் பயணிக்கும் கதையில், எந்தக் குழப்பமும் நேராதவாறு திறம்படத் தொகுத்துள்ளார் ரிச்சர்ட் கெவின். சைமன் கே கிங்கின் பின்னணி இசை, தொடருக்கு மிகப் பெரிய பக்கபலம். கொலையாளி யார் என அறிந்து கொள்வது வெலோனிக்கு எத்தகைய நியாயத்தை அளிக்கும் எனத் தெரியவில்லை. எஸ்.ஜே.சூர்யாவின் அரற்றலில் இருந்து ஸ்மிருதி வெங்கட்டுக்கு விடுதலை என்றளவில் தொடரின் முடிவு சுபமே! அம்முடிவை விரைந்து அடையாமல், நிதானமாக நகரும் ஓடை போல் வெலோனியின் ஃபேபிள் பொறுமையுடன் பயணிக்கிறது.