கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் ‘பவர்’ அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.
-
- கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.
-
- நவம்பர் 5 ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 21 கசாப்பிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நவம்பர் 6 ‘எக்கானாமிஸ்ட் டைம்ஸ்’ நிருபர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கசாப்பின் கருணை மனு என்னவாயிற்று என கேட்டுள்ளார். மனு pending-ல் உள்ளது என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. உண்மையை மறைப்பது என்பது வேறு; பொய் சொல்வது வேறு. தன்னுடைய குடிமக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றும் அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்? கசாப்பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என எந்த முன்னறிவிப்பும் இன்றி அரசு ரகசியமாக செயல்படுத்தியுள்ளது. யார் இப்படி எவருக்கும் தெரியாமல் இரவில் ரகசியமாக செயல்படுபவர்கள்!?
-
- கசாப்பின் மரண தண்டனையை ரத்துச் செய்யக் கோரி மேலும் பலர் கருணை மனுக்கள் போட்டிருந்தனர். அவர்களின் மனுவின் மீதான நிலைபாட்டைக் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இப்படிக் கருணை மனு நிலுவையில் இருக்கும் பொழுது, மரண தண்டனை நிறைவேற்றப்பட கூடாது என்பது சட்டம். ஆனால் இந்திய அரசு இந்தச் சட்டத்தையும் மீறியுள்ளது. பொதுவாக இது போன்ற சூழ்நிலைகளில், சட்டத்தை மீறியதற்கு அரசு சொல்லும் சாக்கு – “தேசிய பாதுகாப்பு”. ஆனால் அரசு இம்முறை மிக ஆணவமாக, பெருவாரியான மக்களின் ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கையில், ‘மனிதநேய ஆர்வலர்கள் சட்டத்தின் உதவியோடு தடை உத்தரவு பெற்று விடாமல் இருக்கவே ரகசியமாக தண்டனையை நிறைவேற்றினோம்’ என பகிரங்கமாகச் சொல்லியுள்ளது. இதை உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதலமைச்சரும் இரு வெவ்வேறு ஊடகத்திற்கு தனி தனியாக பேட்டி அளித்துள்ளனர்.
-
- எவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதோ, அவரின் வீட்டிற்கு இந்திய அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். கசாப்பின் முகவரி இருந்தும், அவரது தாயிற்கு தகவல் தெரிவிக்காமல், பாகிஸ்தான் HIGH COMMISSIONக்கு இந்திய அரசு தகவல் கொடுத்துள்ளது. இந்திய அரசின் சட்டங்களை மீற எவருக்கும் அதிகாரமில்லாத பொழுது, இவர்களுக்கு (ஆட்சியில் உள்ளவர்கள்) மட்டுமென்ன விதிவிலக்கு!?
-
- கசாப்பின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் இரண்டு நாட்களுக்கு முன், பன்னாட்டு சமூகம் (International Council) ஒன்று கூடி, மரண தண்டனையை முற்றிலும் ஒழிப்பது பற்றி விவாதித்துள்ளது. இந்திய அரசோ அவர்களின் தீர்மானத்தை கேலி செய்வது போல் செயல்பட்டுள்ளது. கசாப்பிற்கு மரண தண்டனை அளிக்கப்படாமல் இருந்திருந்தால், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் சிறந்து நிலைத்திருக்கும்.
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றால், எந்தக் குற்றத்திற்கும் தண்டிக்கப்படக் கூடாதென அர்த்தமில்லை. யார் வேண்டுமானாலும் எந்தக் குற்றமும் செய்யலாம் என அனுமதி அளிப்பதில்லை. குற்றங்களின் தன்மையைப் பொருத்தவாறு கண்டிப்பாக தண்டனை தீர்மானிக்கப்பட வேண்டும். உச்சபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனையை மாற்றணும். ஒருவன் தன் தவறை உணர ஆயுள் தண்டனையே போதுமானது. Rarest rare கேஸ் குற்றங்களை தடுக்க மரண தண்டனைப் பற்றிய பயம் உதவும் என ஒரு கருத்து நிலவுகிறது. தவறு செய்பவர் எவரும் தண்டனைக் குறித்து சிந்திப்பதில்லை; மாறாக தான் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையிலேயே குற்றம் இழைக்கின்றனர். பிறகு பயம் எப்படிக் குற்றத்தை தடுக்க உதவும்? மேலும் மரண தண்டனையை ஒழித்தால், குற்றங்கள் அதிகரிக்கும் என்ற வாதத்திற்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாட்டில், அதன் பின், குற்ற சதவிகிதம் அதிகரிக்கவில்லை என்று statistical report சொல்கிறது.
அனைத்து நாடுகளிலும் மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை முழு மூச்சாகப் பாடுபடுவோம்.
நன்றி.
– வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி
(‘மரண தண்டனை மக்கள் எதிர்ப்பு இயக்கம்’ நடத்திய “98 ஆம் ஆண்டு வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிறந்த நாள்” நிகழ்வில் மரண தண்டனை எதிர்ப்பிற்கான கிருஷ்ணய்யர் விருது பெற்ற யுக் மோகித் சவுத்ரி பேசியதன் சுருக்கம்)
நாள்: 01-12-2012
அவர் தனது உரையை முடித்ததும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி: மூன்று வயது குழந்தையை ஒருவன் கற்பழித்து கொடூரமாக கொன்று விடுகிறான். அவனுக்கும் மரண தண்டனை வேண்டாம் என்பது பொருந்துமா!?
அவரது பதிலின் சுருக்கம்: மூன்று வயது குழந்தை கற்பழிக்கப்பட்டு விட்டது. பதிலுக்கு அவன் வீட்டு குழந்தையைக் கற்பழித்து விடலாமா? நம் வீட்டை கொள்ளை அடித்தவன் வீட்டிற்குள் புகுந்து நாமும் கொள்ளையடித்து விடலாமா? இது ரொம்ப அபத்தமா.. பழிவாங்கும் செயல் போல இருக்கில்ல!! ஏன் தண்டனை? தண்டனையின் நோக்கம் என்ன? வேணும்னா அதை நாலாக பிரிக்கலாம்.
1. சீர்திருத்தம்
2. பழி வாங்குதல்
3. Protection to society
4. பயமுறுத்தி வைப்பது
சீர்திருத்தவோ, சமூகத்திற்கு பாதுகாப்பளிக்கவோ, பயமுறுத்தித் தவறுகளைச் செய்யாமல் தடுக்கவோ, மரண தண்டனை அவசியம் இல்லை. முன்பே சொன்னது போல் பழி வாங்குவது என்பது பெரும் அபத்தம். ஆக மரண தண்டனை வேண்டாம் என்பது அனைத்து குற்றத்திற்கும் பொருந்தும்.
யுக் மோகித் சவுத்ரி தனது உரையை இப்படித் தான் அன்று தொடங்கினார்: “நான் சென்னைக்கு முதன் முதலில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனைக்கு தடை உத்தரவு வாங்கும் சமயத்தில் வந்திருந்தேன். அவர்களுக்காக தான் இன்றும் இந்தக் கூட்டம் கூடியுள்ளது என நினைக்கிறேன். எனக்கு உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது. ஒருவேளை கசாப் தூக்கிலிடப்படாமல் இருந்திருந்தால்.. அவரின் மரண தண்டனையை ரத்துச் செய்யக் கோரி இங்கு எத்தனை பேர் குழுமி இருப்பீர்கள்?”
என்னையும் சேர்த்து பத்து பேருக்கும் குறைவானவர்களே கையை உயர்த்தினர் என்பது மிக மிக வருத்தத்தற்குரிய விடயம்.