32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

Dinesh R சேலம் Published: 01/05/2026 4 நிமிட வாசிப்பு Updated: 02/05/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா?

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் காரில் வந்த ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் என்கிறது அக்குழந்தை. ஆறு பிணங்களுக்கு மத்தியில் காருக்குள் ஒரு ஆறு வயது குழந்தை மட்டும் கால் சென்ட்டர் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது என படம் தொடங்கிய 25 ஆவது நிமிடத்தில், நம் மொத்த உலகத்தையும் காலுக்கடியில் நழுவ வைத்து விடுகிறது. சுமார் இரண்டரை மணி நேரமாக அக்குழந்தையுடன் தொடர்பில் இருந்து, அக்குழந்தைக்குத் தைரியம் சொல்லிக் கொண்டுள்ளார்கள் ரெட் க்ரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரிபவர்கள்.

எட்டு நிமிட தொலைவில் இருந்தும், காஸாவின் போர்ப்பகுதி என்பதால் அப்பாலஸ்தீனியக் குழந்தையை மீட்க ஆம்புலன்ஸால் செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் சென்று குழந்தையை மீட்க அனுமதி கிடைக்காததால், கால் சென்டரில் உள்ளவர்கள் தவித்தும் கொதித்தும் போகிறார்கள்.

“நான் செத்துடுவேனா?”

அந்தக் குழந்தையின் குரலைச் சமூக ஊடகத்தில் போட்டு, அது வைரலானால், உடனடியாக உதவி கிடைக்கக்கூடும் எனும் நப்பாசையும் எழுகிறது கால் சென்ட்டர் ஊழியர்களுக்கு. விரக்தியிலும் இயலாமையின் உச்சத்திலும் இருக்கும் ஓமர், தன் மொபைலை எடுத்து, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட இறந்த குழந்தைகளின் உடல்களுள்ள புகைப்படத்தைக் காட்டி, ‘இதற்கே மனமிறங்காதவர்களா ஒரு குழந்தையின் குரலுக்குச் செவி சாய்ப்பார்கள்?’ என்கிறார். மாபெரும் மனித சீர்குலைவிற்கு ஒட்டுமொத்த உலக மக்களுமே சாட்சியாக்கப்பட்டுள்ளோம்.

இணையத்தில் காணக் கிடைக்கும் அனிமல் கிங்டம் வீடியோக்களில், ஒரு புலி, தாயிடம் இருந்து பிரிந்த மழலை நடை நடக்கும் சின்னஞ்சிறு மான் குட்டியைப் பத்திரமாக மீண்டும் தாயிடமே ஒப்படைக்கும் வரை உற்ற துணையாக இருந்து பாதுகாக்கும் வீடியோவைத் தேடிப் பார்க்கவும். அத்தகைய பண்பிற்கு Interspecies Altruism எனப் பெயர். சரியாக நடக்குமளவு கூட வளராத இளம் சிறு உயிரினங்களைக் காணும் பொழுது வேட்டை மிருகங்களுக்குள் இருக்கும் பெற்றோர்த்துவத்தை (Parenthood) ட்ரிக்கர் செய்யும்படியாகப் படைத்திருப்பது இயற்கையின் சிறப்பானதொரு பரிணாம அம்சமாகும். ஆனால்,

காஸாவில், திட்டமிட்டுப் பட்டினியில் ஆழ்த்தப்பட்டோ, சுடப்பட்டோ கொத்துக் கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்படுகையில், அதை நிகழ்த்துபவர்களுக்குக் கொஞ்சம் கூட மனிதம் எட்டிப் பார்க்கவில்லை. எதுவும் நிகழாதது போல் கண்டும் காணாமலும் இருக்கும் நாடுகள் எதுவாகினும், நாகரீக சமூகம் எனச் சொல்லிக் கொள்ளும் தகுதியை அவை இழக்கின்றன. இஸ்ரேலுடனான உறவு பாதிக்கப்பட்டு விடக்கூடாதென இப்படத்தை இந்தியாவில் திரையிடத் தடைவிதித்து விட்டது CBFC. வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில், இப்படம் முடிந்ததும் 23 நிமிட 50 நொடிகள் கரகோஷம் எழுப்பியுள்ளனர் பார்வையாளர்கள். திரைப்பட விழாக்களில் அதிக நேரம் கைதட்டலைப் பெற்ற படமெனும் எனும் சாதனையைப் படைத்துள்ளது அச்சிறுமியின் குரல்.

அந்தச் சிறுமியின் குரலில் தொனிக்கும் குழந்தைத்தனத்தையும், வலியையும், பயத்தையும், ஃபோனில் பேசும் பெரியவர்களால் தன்னைக் காப்பாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையையும் செவியுற்றவர்கள், அதன் பின், அந்த பாரத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்தே ஆகவேண்டும் – ஒரு வேளை நீங்கள் ஃபாதர்லேண்டைச் சேர்ந்த அதிகாரத்திமிரின் சார்பை எடுக்காதவர்களாக இருந்தால்! அச்சிறுமி இருந்த கார், இராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த 335 குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது.

இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தை பேசிய ஆடியோவைப் படத்தில் அப்படியே பயன்படுத்தியுள்ளனர். உலகத்தை சரியாகக் கூட அறியாத அந்த சிறு உயிரின் பயத்தையும், அந்த உயிரைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மனிதர்களின் மனநிலையையும் எந்த வார்த்தைகளைக் கொண்டும் விவரித்து விட முடியாது.* ஆனால், அந்தக் குரலை அப்படியே பயன்படுத்தி, அந்தக் கணத்தில் அந்தக் குழந்தை அனுபவித்த பயத்தையும் பதற்றத்தையும் கடத்தியுள்ளார் துனிசியாவைச் சேர்ந்த பெண் இயக்குநரான கெளத்தர் பென் ஹனியா (Kaouther Ben Hania). ஓமராக நடித்துள்ள மோட்டஸ் மல்ஹீஸும் (Motaz Malhees), ராணாவாக நடித்துள்ள சாஜா கிலானியும் (Saja Kilani), குற்றவுணர்வையும் ஆற்றாமையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். அதிகாரமிக்க இஸ்ரேவலர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட மனிதம், ஒரு சின்ன அலுவலகத்தில் பணிபுரியும் சாமானிய பாலஸ்தீனியர்களிடம் வெளிப்பட்டு, அது பார்வையாளர்களை நிலைகுலைய வைக்கிறது. இனப்படுகொலையை முன்னெடுக்கும் இஸ்ரேலியப் படைக்கு எதிராக, ஹிந்த் ரஜாப் ஹமதா எனும் சிறுமியைக் காப்பாற்றத் தங்களாலான எல்லா முயற்சிகளையும் சக்திக்கு மீறி எடுக்கின்றனர். சக மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கைகள் முற்றிலும் குலைந்து போகாமல் இருக்க ஓமர், ராணா போன்ற மனிதர்களே காரணம். Elohim-ஏ கோபமாகத் தோன்றி எச்சரித்துத் தண்டிக்காத வரை, மதம் பிடித்த அம்மனிதர்கள் தங்கள் மனங்களில் இருக்கும் குரூரத்தைக் கைவிடப் போவதில்லை.

*இப்படத்தைப் பரிந்துரைத்துத் தூக்கத்தைக் கெடுத்தப் பாளையத்தார்க்கு ஆழ்ந்த நன்றிகள்.

– தினேஷ் ராம்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.