அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள்.
நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. “இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது” என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் சார்பாக இயங்க வைத்துள்ளார். தினேஷ் ராம், டேனியல் அண்ணனை முருகன் மந்திரம் சாரிடம் கொண்டு சேர்த்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. சரியான நபரிடம் சரியான ஆளைச் சேர்த்துவிட்டிருக்கிறார். இந்த நல் சேர்க்கையால் தான் நாவல் தரமாக வந்திருக்கிறது.
மருத்துவமனையில் துவங்கும் கதையில் மூன்று பெண் மாந்தர்கள் முக்கிய ரோல்ப்ளே செய்கிறார்கள். ஒரு பெண் சக நோய்மை உடைய பெண்ணோடு நட்பாகிறாள். ஒருவளுக்கு ஒரு தோழன் உண்டு. அந்த தோழனின் நடத்தைத் தெரிந்த ஒரு பெண், தனது தோழியிடம் அவனை அறிமுகம் செய்துவிடக்கூடாது என நினைக்கிறாள். ஆனால் வாழ்வு நாம் நினைக்காததை அது நினைத்த நேரத்தில் தரும் தானே! அப்படியொரு இடிபோன்ற திருப்பம் அவ்விரு பெண்கள் வாழ்வில் ஏற்படுகிறது. அந்த வாழ்வுக்குள் வரும் சிக்கல்களையும் சிக்கல்களுக்கான தீர்வையும் ஒரு பரபரப்பான எமோஷ்னல் திரைக்கதை ரேஞ்சிற்கு எழுதிச் செல்கிறார் எழுத்தாளர் டேனியல். அவரின் மொழிநடையில் கைபிடித்து அழைத்துச் செல்லும் ஆதுரம் இருக்கிறது.
பெரும்பான்மை ஜனத்திற்கு அரசு மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களைப் பற்றிய ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘திருவின் குரல்’ படம் கூட அவ்வூழியர்களை சமூகத்தின் மிக முக்கியக் குற்றவாளிகள் என்பதாகச் சித்தரித்து வன்மம் கொட்டியிருந்தது. டேனியல் அண்ணனின் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்குக் கருணையும் ஈரமும் இருக்கிறது. இயல்பாகவே மனிதருக்குள் எப்போதாவது சிலருக்குள் எப்போதும் இருக்கும் கருணையையும் அன்பையும் அந்த தருணத்திற்கு அழைத்துச் சென்று அடையாளம் காட்டுகிறார் டேனியல். தேவியின் ஆறுதலிலும், தேன்மொழியின் அன்பிலும், ஸ்வேதாவின் நம்பிக்கையிலும், தினேஷின் நடத்தையிலும், ஊர்த்தலைவர் முத்துவின் செயல்களிலும், தனத்தின் ஈகோவிலும், கிழவியின் கவனிப்புகளிலும், அப்பாத்துரையின் அமைதியிலும், உள்ளூர அன்பு யாரிடம் கொடுப்போம் என கொட்டிக் கிடக்கிறது.
ஏனோ இந்நாவலின் ஒரு பகுதி கண்ணீரை வர வைத்துவிட்டது. உண்ண உணவு இல்லாவிட்டாலும் பராவாயில்லை. குடிக்க தண்ணீர் தரக் கூட மறுக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு அந்தத் தண்ணீர் கேட்டு அலைந்து திரிந்த இடத்திலே ஒரு பிரமாண்டமான சம்பவம் நடக்கும். இழந்து நின்றவர்கள் எழுந்து நிற்கும் போது நமக்குள் திறக்கும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியாது. எனக்குள் நான் திவங்கிச் செரித்த அவமானங்கள் அத்தனையும் பெரும் நம்பிக்கையாய் மாறியது நாவலின் அந்தப் பகுதியை வாசிக்கும் போது. ஒன்றாம் வகுப்புக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் செல்லாத டேனியல் அண்ணனின் முதல் நாவல் இது. அவரிடம் படிப்பு இல்லை தான். அவரைப் படிக்க நிறையவே இருக்கிறது. அதற்கு இந்த நாவல் சாட்சி.
நாவலை Kindle-இல் வாசிக்க: மூதின்முல்லை
– மு. ஜெகன் கவிராஜ்