32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

Dinesh R சேலம் Published: 26/07/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

ஆகாச வீரன் எனும் பரோட்டா மாஸ்டர், தன் மனைவி பேரரசிக்கும், அம்மாவான பொட்டுக்கும் இடையில் சிக்கிப் படாதபாடுபடுகிறான். அவனது பாடு, அல்லது எந்தவொரு கணவனின் பாடும், ஒரு முடிவே இல்லாத பயணம் என்பதைப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றது. அவ்வளவு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் படத்தில் ஒரு தனித்த அடையாளமும், திரைக்கதையில் ஒரு சின்ன பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ்க்கு, மனிதர்களைக் கூட்டி, அவர்கள் மூலமாக உறவுகளைப் பற்றிப் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது.

இப்படத்தின் குறை, ஆகாச வீரனாக வரும் விஜய் சேதுபதி நிறையப் பேசுகிறார், அதையும் சத்தமாகப் பேசிக் கொண்டே உள்ளார். பேரரசியாக நித்யா மேனன் கலக்கியுள்ளார். அவர்களது மகள் குட்டிச் சிறுமியாக நடித்திருக்கும் மகிழினி ஷோ-ஸ்டீலராக அசத்தியுள்ளார். பாதி மொட்டையடிக்கப்பட்ட தலையுடன், இவர்கள் சண்டையில் சிக்கிக் கொள்ளும் மகிழினியைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ‘எப்படா உங்க சண்டை முடியும்?’ என்று பார்வையாளர்கள் கடுப்பாகும் அளவு திகட்டிவிடுகிறது ஒரு கட்டத்தில். படம் முடிந்து, இயக்குநரின் பெயர் திரையில் வந்த பின், போஸ்ட் கிரெடிட் சீன்ஸ் போல் வரும் காட்சியில், யோகிபாபு அடிக்கும் கவுன்ட்டர் வசனம் பார்வையாளர்களின் மனதைப் பிரதிபலிப்பது போல் ஆசுவாசமாக உள்ளது.

திருட்டுத் தொழிலுக்குப் போக, குலச்சாமியிடம் உத்தரவு கேட்க சித்திரையாக நடித்துள்ளார் யோகிபாபு. எழுத்தாளர் இமையத்தின் ஆகாசத்தின் உத்தரவு எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு யோகிபாபுவின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. புகுந்த வீட்டில் எப்படியிருக்க வேண்டுமென பேரரசிக்குப் பாடமெடுத்து கலகம் புரியும் பாத்திரத்தில், பேரரசியின் அம்மா ஆவர்ணமாக நடித்துள்ளார் ஜானகி சுரேஷ். அவருக்குப் போட்டியாகப் பேரரசியை வம்புக்கிழுக்கும் வேலையை, ஆகாசவீரனின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா செய்கிறார். மெட்ராஸ் மேட்னியில் இருந்து மாறுபட்டு, ராகவர்த்தினி எனும் பாத்திரத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக ரோஷினி ஹரிபிரியன், பேரரசியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார். நைனாவதி, அரசாங்கம், பொற்செல்வன், செம்பய்யா, பொற்செல்வன், பாரிவேந்தன், நாகப்பாம்பு, ஒத்தாசை, மடப்புலி என கதாபாத்திரங்களின் பெயர்களை மிக ரசனையாக வைத்துள்ளார் பாண்டிராஜ்.

அனைவரும் டாப் கியரிலேயே பெர்ஃபார்ம் பண்ணிக் கொண்டிருக்க, அமரசிகாமணியாக நடித்திருக்கும் காளி வெங்கட்டோ, தன் தங்கையின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் காட்சியில் சிறப்பான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களும், படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்களும், கோவிலில் நடக்கும் ஒரு கணவன் – மனைவி சண்டையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால் மனதில் ஒட்டாமல் போனாலும், திருவிழாவில் சிக்கியதொரு பொழுதுபோக்கையும் கலகலப்பையும் நல்குகிறது தலைவன் தலைவி திரைப்படம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.