Shadow

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை காவ்யா, “ ‘ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது” என்றார்.

கவின், “சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாகப் படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.

இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.

கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.